இந்தியா

புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?

புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?

webteam

புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு பதவி வழங்கப்படலாம் என யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 30 ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்த அமைச்சரவையில் யார், யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

அந்த வகையில் பாஜக தலைவராக இருக்கும் அமித்ஷாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் பாஜக தலைவராக இருப்பவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கக்கூடாது என்பது அக்கட்சியின் கொள்கையாக இருக்கிறது. எனவே, அமித்ஷாவை கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வைத்து விட்டு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை உள்துறை அமைச்சர் பதவியை வகித்த ராஜ்நாத் சிங்குக்கு, இம்முறை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அதேபோல், அமேதியில் ராகுலை வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கு முக்கிய துறை ஒதுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மற்றொருபுறம் ஹரியானா, மகாராஷ்டிரா இரு மாநிலங்களுக்கும் அடுத்த ஆறு மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. எனவே மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி எம்.பி.க்கள் சிலருக்கு முக்கிய இலாக்கா ஒதுக்கவும் வாயப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சர் பொறுப்பு வகித்து வந்த அருண் ஜேட்லி கடந்த சில மாதங்களாக உடல்நலமில்லாமல் இருப்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. மற்றபடி கடந்த முறை அமைச்சரவையில் இருந்தவர்களே, இம்முறையும் நீடிக்கலாம் அல்லது வேறு துறைகளுக்கு மாற்றப்படலாம் என்றும் யூகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது.