லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் ஃபேஸ்புக்
இந்தியா

2024-லிலும் பத்திரங்களை பெற்ற மார்ட்டின் நிறுவனம்... தொழிலாளி To கோடீஸ்வரன்.. யார் இந்த மார்ட்டின்?

அக்டோபர் 2020-ல் பத்திரங்களை வாங்கத் தொடங்கிய அந்த நிறுவனம் 2021, 2022, 2023 என தொடர்ச்சியாக பத்திரங்களை வாங்கியுள்ளது. கடைசியாக 9 ஜனவரி 2024-ல் கூட தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

Angeshwar G

கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது

நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகள் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள நிலையில் அவ்விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

விவரங்களை வெளியிடுவதற்கான அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் அத்தகவல்கள் இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டன. இதன்படி ஏர்டெல்லை நடத்தும் பார்தி குழுமம், முத்தூட் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்ஆர்எஃப், சியட், வேதாந்தா, ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப் என பல பிரபல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ரூ.100 கோடிக்கும் அதிகமாக கொடுத்துள்ள 22 நிறுவனங்கள்

உச்சநீதிமன்றம், எஸ்பிஐ

ரூ. 100 கோடிக்கும் அதிகமான நிதியை 22 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழங்கியுள்ளன. மிகப்பெரிய கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம் பெற்றுள்ள ஐதராபாத்தின் மெகா இன்ஜினியரிங் நிறுவனம் 966 கோடி ரூபாய்க்கும், ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் 398 கோடி ரூபாய்க்கும் சுனில் மிட்டலின் 3 நிறுவனங்கள் 246 கோடி ரூபாய்க்கும் பஜாஜ் ஆட்டோ 18 கோடி ரூபாய்க்கும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இவை தவிர மேலும் பல நிறுவனங்களும் பத்திரங்களை வாங்கியுள்ளன.

சந்தியாகு மார்ட்டின்

இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அதிகபட்சமாக ஆயிரத்து 368 கோடி ரூபாய் மதிப்புக்கு பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் அதன் இணையத்தில் அளித்துள்ள தரவுகளின்படி, இந்த நிறுவனம் அளித்துள்ள நன்கொடைகள் அனைத்தும் ஒருகோடி நிதிப்பத்திரங்களாக அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2020ல் பத்திரங்களை வாங்கத் தொடங்கிய அந்த நிறுவனம் 2021, 2022, 2023 என தொடர்ச்சியாக பத்திரங்களை வாங்கியுள்ளது. கடைசியாக 9 ஜனவரி 2024ல் கூட தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின்

மார்ட்டின் அறக்கட்டளை வலைதளத்தில், மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சந்தியாகு மார்ட்டின் என குறிப்பிடப்பட்டுள்ளது. மியான்மரில் உள்ள யாங்கூனில் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், 1988-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சிஸ் லிமிட்டெட் என்ற பெயரில் லாட்டரி வியாபாரத்தை தொடங்கினார். லாட்டரி மோகம் அந்த காலத்தில் அதிகமாக இருந்ததால் இவரது நிறுவனம் வேகமாக வளர்ந்தது. இதன் காரணமாக தனது வியாபாரத்தை கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் விரிவுபடுத்தினார். ஆரம்பத்தில் வடமாநிலங்களில் அரசாங்க லாட்டரி திட்டங்களை நிர்வகிப்பதில் கவனத்தை செலுத்தினார்.

ED கண்காணிப்பிலும் இருந்த மார்ட்டின்

பிறதுறைகளிலும் தொழில் தொடங்கினார். ரியஸ் எஸ்டேட், கட்டுமானம், டெக்ஸ்டைல்ஸ், ஆன்லைன் கேமிங் என பல தளங்களில் அவரது தொழில் விரிவடைந்தது. மேலும் இந்தியாவின் அகில இந்திய லாட்டரி வர்த்தகம் மற்றும் அது சார்ந்த தொழில்களின் கூட்டமைப்புத் தலைவராகவும் உள்ளார் என்று அவரது நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. அவரது Future Gaming Services Private Limited நிறுவனம், உலக லாட்டரி சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளது.

2011-ஆம் ஆண்டு முதல் மார்ட்டினும் அவரது நிறுவனமும், செலுத்தப்படாத வரி, பணமோசடி மற்றும் மோசடி போன்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளின் கண்காணிப்பிலும் மார்ட்டின் உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் நில அபகரிப்பு வழக்கு, போலி லாட்டரி விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டார். பின் சென்னை உயர்நீதிமன்றம் அவரது காவலை ரத்து செய்து ஜாமீனில் விடுவித்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வசனத்தில் இளைஞன் என்ற திரைப்படத்தையும் தயாரித்தார்.

நியூயார்க்கில் உள்ள யார்க்கர் இண்டர்நேஷனல் யுனிவர்சிட்டியில் இருந்து வணிக நிர்வாகத்திற்கான கௌரவ முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இத்தாலியில் உள்ள போபோலரே டெக்லி ஸ்டுடி டி மிலானோ பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

மொத்தமாக ரூ.1368 கோடி ரூபாயை தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக மார்ட்டின் வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் பணம் யாருக்கு சென்றது என்பது மில்லியன் மார்க் கேள்விக்குறி. ஆனால், 6 ஆயிரத்திற்கும் அதிகமான கோடிகளை பாஜக நன்கொடையாக (ரூ.6061 கோடி) பெற்றுள்ளதால், மார்ட்டின் அளித்துள்ள நன்கொடையிலும் பெரும்பாலும் பாஜகவிற்கு சென்றிருக்கும் என்றே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.