சஞ்சீவ் கன்னா, டி.ஒய்.சந்திரசூட் எக்ஸ் தளம்
இந்தியா

நிறைவடையும் சந்திரசூட்டின் பதவிக்காலம்.. பதவியேற்கும் புதிய தலைமை நீதிபதி.. யார் இந்த சஞ்சீவ் கன்னா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் நிறைவுடைவதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்க உள்ளார்.

Prakash J

ஓய்வுபெறும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் நவம்பர் 10ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு, அவருக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 51வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்க உள்ளார். இதையடுத்து நவம்பர் 11ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

டி.ஒய்.சந்திரசூட்

யார் இந்த சஞ்சீவ் கன்னா?

டெல்லியில் 1960ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி பிறந்த இவர், அங்குள்ள பல்கலையிலேயே சட்டம் பயின்றார். இவரது தந்தை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக 1985ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர். 1983ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட சஞ்சீவ் கன்னா, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக (சிவில்) நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி, உச்சநீதிமன்ற நீதிபதியாக இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: பன்னுன் கொலை முயற்சி | முன்னாள் ’ரா’ அதிகாரி விகேஷ் யாதவ் மீது US குற்றச்சாட்டு.. மறுக்கும் இந்தியா!

சஞ்சீவ் கன்னா அளித்த முக்கியத் தீர்ப்புகள்!

அரசியலமைப்புச் சட்டம், நடுவர் மன்றம் மற்றும் வணிகச் சட்டம் போன்ற பல்வேறு சட்டப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றார். வருமானவரித் துறையின் மூத்த நிலை ஆலோசகராகவும், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தின் நிலையான ஆலோசகராகவும் பணியாற்றியது அவரது பரந்த அனுபவத்தில் அடங்கும். உச்சநீதிமன்ற சட்டச் சேவைகள் குழு மற்றும் தேசிய சட்டச் சேவைகள் ஆணையம் (நல்சா) போன்ற முன்முயற்சிகளில் அவருடைய செயல்பாடுகளுக்காகக் கவனம் ஈர்க்கப்பட்டார். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் முக்கிய தீர்ப்பளித்தவர்.

அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வில் உறுப்பினராக இருந்தவர். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அனுமதிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த அரசியலமைப்பு பெஞ்சில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். கடந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்குவதை உறுதி செய்த அரசியலமைப்பு பெஞ்சில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். ஜூலை மாதம், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அவர் தலைமையிலான பெஞ்ச், அப்போது டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இவர், அடுத்த ஆண்டு மே 13ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

இதையும் படிக்க: கனடா | பிரதமர் ட்ரூடோ ராஜினாமா செய்ய காலக்கெடு! சொந்த கட்சியினரே எதிர்ப்பு.. பின்னணிக் காரணம் என்ன?