இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி, ஆசிய வங்கி உள்ளிட்ட சர்வதேச தர ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன .அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து 169 பேர் இணைந்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 166 பேர் மட்டுமே இருந்தனர்.
அனைவரும் எதிர்பார்த்தபடியே, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் 15ஆவது இடத்தை பிடித்துள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 82 ஆயிரம்கோடி ரூபாயாக உள்ளது. அடுத்ததாக, 5 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி உள்ளார். இவர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 16ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ஹெச்.சி.எல். டெல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார் 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும், துளுறு குழுமத்தைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும் ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் தடுப்பூசி தயாரித்து பிரபலமான சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும், சன் பார்மா நிறுவனத்தின் திலீப் ஷாங்வி ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள டிமார்ட் சூப்பர் மார்க்கெட்டின் தலைவர்ர ராதாகிருஷ்ணன் தாமனியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய். ஆர்சிலார் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய். டி.எல்.எஃப் நிறுவனத்தின் குஷல் பால் சிங்கின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம்கோடி ரூபாய். இவர்களும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.