நான்காம் கட்ட வேட்பாளர்கள் pt web
இந்தியா

நான்காம் கட்ட தேர்தல்.. களத்தில் யூசுப் பதான்.. முக்கிய வேட்பாளர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன?

நான்காம் கட்ட தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவுள்ள முக்கிய வேட்பாளர்களையும், அவர்களது பின்னணி குறித்தும் தற்போது பார்க்கலாம்...

PT WEB

நாடாளுமன்ற தேர்தலில் 4வது கட்டத்தில் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்குட்பட்ட, 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை மக்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், அம்மாநிலத்தின் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். கண்னூஜ் தொகுதி அகிலேஷ் யாதவின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது. தந்தை முலாயம் சிங் யாதவ் போட்டியிட்டு வென்ற அத்தொகுதியில், 2000 ஆம் ஆண்டு முதல் அகிலேஷ் யாதவ் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து அவரது மனைவி டிம்பிள் யாதவ், அத்தொகுதியை தன் வசம் வைத்திருந்தார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டிம்பிள் யாதவ், பாஜகவிடம் தோல்வியடைந்தார். இதனால் மனைவியின் தோல்விக்கு பதிலடி தரும் நோக்கத்துடனும், கண்ணூஜ் தொகுதியில் செல்வாக்கை மீட்க வேண்டிய கட்டாயத்துடனும், அத்தொகுதியிம் மீண்டும் அகிலேஷ் யாதவ் களமிறங்குகிறார்.

களத்தில் யூசுப் பதான்

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில், திரிணாமூல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், மஹூவா மொய்த்ரா மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

அம்மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் போட்டியிடுகிறார். 1999 ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் அவரை எதிர்த்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்..

கவனம் ஈர்க்கும் கடப்பா

ஜெகன் மோகன் ரெட்டி, ஷர்மிளா

ஆந்திராவில் உள்ள கடப்பா தொகுதி, இந்த நாடாளுமன்ற தேர்தலில் உற்று கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக, அம்மாநில முதலமைச்சரும், சகோதரருமான ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்து வரும் ஒ.எஸ். சர்மிளா, கடப்பா தொகுதியில் தனது முதல் தேர்தலை சந்திக்கிறார். அவருக்கு எதிராக தங்களது உறவினராக ஓ.எஸ். அவினாஷ் ரெட்டியை ஜெகன் மோகன் களமிறக்கியுள்ளதால், கடப்பா தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அசாதுதீன் ஓவைசி

தெலங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் போட்டியிடுகிறார். 1984 ஆண்டு முதல் ஏ. ஐ.எம்.ஐ.எம் கட்சி வசம் இருக்கும் ஹைதராபாத் தொகுதியில், 2004 ஆம் ஆண்டு முதல் ஓவைசி மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். ஒவைசியை எதிர்த்து இந்த முறை பாஜக சார்பாக மாதவி லதா போட்டியிடுகிறார். ராம நவமி ஊர்வலத்தின்போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல், அவர் செய்த சைகை கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.