ஹரியானா சட்டப்பேரவைக்கு 90 உறுப்பினர் இடங்கள் இருக்கின்றன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. இதன் மூலம்10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
ஆனால் 2019 தேர்தலில், முந்தைய தேர்தலை விட ஏழு இடங்கள் குறைந்து 40 இடங்களை மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது. 31 இடங்களை கைப்பற்றியிருந்த காங்கிரஸ், புதிதாக தொடங்கிய துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்து விடலாம் என்று முயற்சிகள் மேற்கொண்டது. அது பலன் அளிக்காமல் போக, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பாஜக துஷ்யந்த் சௌதலாவுடன் கைகோர்த்து ஆட்சியை அமைத்தது. அதற்கு பிரதிபலனாக துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இருப்பினும் விவசாயிகளின் போராட்டம், அக்னிபத் திட்டம், ஓ பி சி இட ஒதுக்கீடு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் போன்றவற்றால் சில மாதங்களுக்கு முன்பாக கூட்டணியில் இருந்து வெளியேறினார் துஷ்யந்த் சவுதாலா.
ஹரியானா சட்டப்பேரவையின் தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதாவுக்கு 41 இடங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி 28 உறுப்பினர்களுடன் இருக்கிறது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி 6 உறுப்பினர் இடங்களையும், சுயேச்சைகள் 4 இடங்களையும் பெற்றுள்ளனர். இந்திய தேசிய லோக் தள், Haryana Lokhit ஆகியவை தலா ஒரு இடத்தை கொண்டுள்ளன. 9 இடங்கள் காலியாக உள்ளன.
2024 தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் உடன் கைகோர்த்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரே ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. ஒருபக்கம் ஜனநாயக் ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் ஆகியவை ஒரு கூட்டணியிலும், இந்திய தேசிய லோக்தள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றொரு கூட்டணியிலும் போட்டியிடும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி, ஹரியானா லோகித் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாகவே களம் காண்கின்றன.
தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சொல்லிவிடும்.