இந்தியா

"என் மகனாய் இருந்தாலும் அவனும் ஒரு போர் கைதியே" நெகிழ வைத்த ஜெனரல் கரியப்பாவின் நேர்மை !

"என் மகனாய் இருந்தாலும் அவனும் ஒரு போர் கைதியே" நெகிழ வைத்த ஜெனரல் கரியப்பாவின் நேர்மை !

webteam

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானியை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியுள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஜெனரல் கே.எம்.கரியப்பாவின் மகன் போர் கைதியாக பிடிபட்ட போது அவர் கூறிய நேகிழ்ச்சியான பதிலை காணலாம்.

இந்தியாவின் முதல் ராணுவ ஜெனரலாக பணியாற்றிவர் கே.எம்.கரியப்பா. இவர் கர்நாடக மாநிலத்தில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1919 ஆம் ஆண்டு இரண்டாவது லெப்டினன்ட் பதவியை பெற்றார். அதன்பிறகு 1942ஆம் ஆண்டு ஒரு ராணுவ படைக்கு தலைமை வகித்த முதல் இந்தியர் ஆனார் கரியப்பா. அதற்குபின் 1946 ஆம் ஆண்டு பிரிகேடராக பதவி உயர்ந்து பிரிகேட் குழுவிற்கு தலைமை தாங்கினார். 

கே.எம்.கரியப்பா பிரிகேடியர் குழுவில் பணிபுரிந்த போது அவருக்கு கீழ் பணிபுரிந்தார் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி கர்ணல் அயூப் கான். இதனையடுத்து பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார். இறுதியில் 1949 ஆம் ஆண்டு கரியப்பா இந்திய ராணுவப் படையின் ஜெனரல் ஆனார். பின்னர் 1953 ஆம் ஆண்டு கரியப்பா ராணுவத்திலிருந்து ஒய்வுப் பெற்றார்.

கரியப்பாவின் மகன் நந்தா கரியப்பவும் தந்தையின் வழியில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். 1965 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்றது. அந்தப் போரில் கரியப்பாவின் மகன் சென்ற போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. அதில் தப்பிய நந்தா கரியப்பா போர் கைதியாக பாகிஸ்தான் ராணுவத்தில் பிடிபட்டார். அப்போது பாகிஸ்தானின் ஜனாதிபதியான அயூப் கான் கரியப்பாவை தொடர்பு கொண்டு பேசினார். அத்துடன் கரியப்பாவின் மகனை உடனே விடுவிப்பதாக கூறியிருந்தார். அதற்கு கரியப்பா அளித்த பதில் தான் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

கரியப்பா, “அவன் தற்போது என்னுடைய மகனில்லை. தாய் நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களில் ஒருவன். நீங்கள் விடுவிப்பதாக இருந்தால் போர் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். என் மகனை மட்டும் தனியாக விடுவிக்க கூடாது. அவனுக்கு எந்தவிதமான தனி சலுகையையும் அளிக்க கூடாது”எனக் கூறியிருந்தார்.

இவ்வாறு தன் மகன் போர் கைதியாக பிடிப்பட்டிருந்த போதும் கரியப்பா கூறியவை அனைவரையும் மனம் நெகிழவைத்தது. அத்துடன் ஒரு ராணுவ வீரரின் நேர்மை அவர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்பதை நிரூபித்துள்ளார்.