இந்தியா

வகைவகையான ஆயிரம் பறவைகள்.. சந்திரிகா அழைத்தால் அழகாய் வருகின்றன..

வகைவகையான ஆயிரம் பறவைகள்.. சந்திரிகா அழைத்தால் அழகாய் வருகின்றன..

webteam

கேரள மாநிலம் ஒலரியில் ஒரு பெண்மணி பறவைகளின் தாயாக வாழ்ந்து வருகிறார்.

கேரளாவை ‘கடவுளின் தேசம்’ என்பார்கள். ஆனால் அதற்கு அர்த்தம் அங்கே ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன என்பதல்ல; இயற்கை அன்னை அங்கே உயிரோட்டம் குறையாமல் இருக்கிறாள் என்பதற்காகதான். அந்தளவுக்கு கேரளவாசிகள் இயற்கையோடு ‘ஊணு கழிச்சு’ வருகிறார்கள். அதற்கு ஒரு சமீபத்திய சாட்சியம்தான் சந்திரிகா. இவரைப் பறவைகளின் ப்ரியை எனக் கூறலாம்.

சந்திரிகா, அவரது வீட்டுக்கு முன்னால் நின்று கூவிக் கூவி அழைத்தால் நூற்றுக் கணக்கில் கிளிகள் வருகின்றன. அதைத் தாண்டி பலநூறு சிட்டுக்குருவிகள் வருகின்றன. இவை எல்லாம் வீட்டுக்கு வருவது இயற்கைதான். ஆனால் இவரது அன்பான அழைப்புக்கு மிக அழகான பறவையான ஹார்ன்பில் வந்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து, சந்திரிகா அம்மா தரும் ஆகாரத்தை கொத்திக் கொண்டு போகிறது. மனிதரும் மனிதருமாக மட்டுமே வாழ பழகிய காலத்தில் இவர் பறவையும் மனிதருமாக வாழ்ந்து வருகிறார். இந்த ரசனையான வாழ்க்கை பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இந்தச் சேவையை அவர் இன்று நேற்று அல்ல, கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வருகிறார். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதால் இவரது வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் பல பறவைகள் தஞ்சமடைந்துவிட்டன. ஒவ்வொரு நாளும் அவர் இந்தப் பறவைகளுக்காகவே வேக வைத்த அரசி மற்றும் வாழைப்பழங்களை வழங்கி வருகிறார். அதுவும் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் வழங்கி வருகிறார் சந்திரிகா.

முதன்முதலில் அடிப்பட்டு கிடந்த கிளி ஒன்றினை அரவணைத்து உணவு கொடுக்க ஆரம்பித்த சந்திரிகா, படிப்படியாக பல கிளிகளுக்கு உணவுப் போட தொடங்கினார். அதன் பின் ஒருநாள் ஹார்ன்பிள் அவரைத் தேடி மரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறது. அதற்கு அரிசியைப் போட்டு அரவணைத்துள்ளார். ஆனால் ஹார்ன்பிள், கிளிகளைப் போல அரிசியை சாப்பிடவில்லை. ஆகவே அதற்காகவே வாழைப்பழத்தை வழங்கத் தொடங்கியுள்ளார். அதன்பின் அந்த ஹார்ன்பிள் இவருக்கு கட்டுப்பட்டு வாழத் தொடங்கியிருக்கிறது. அதன் அடையாளமாக சந்திரிகா உணவு கொடுப்பதை அவர் கையிலிருந்து எடுத்து புசிக்க ஆரம்பித்திருக்கிறது ஹார்ன்பிள்.

முதலில் இவர் பறவைகளுக்கு உணவளிப்பதை தயங்கித் தயங்கி செய்து வந்துள்ளார். காரணம், அண்டை வீட்டுக்காரர்கள் இந்தப் பறவைகள் இடும் சத்தத்தால் எரிச்சலாகி விடுவார்களோ என்பதுதான். ஆனால் மக்கள் யாரும் தொந்தரவாக எடுத்து கொள்ளவில்லை. அப்புறம் என்ன? காலை 6 மணிக்கு ஒருமுறை, மாலை ஐந்து மணிக்கு ஒருமுறை என்று பகிரங்கமாகவே பறவைகளை அழைக்கத் தொடங்கியுள்ளார் சந்திரிகா, அவரது குரலைக் கேட்ட அடுத்த நொடி அவர் வீட்டு காம்பவுண்ட் சுவருக்கு வந்து உட்கார தொடங்கியுள்ளன பறவைகள். வரும் பறவைகளுக்கு உணவு மட்டுமல்ல; அழகான குடுவையில் குடிக்க தண்ணீரையும் தருகிறார் இவர்.

“வாழ்விடங்களை இழந்த இந்தப் பறவைகளுக்காக சிறந்த வசதிகளை செய்து கொடுத்தோம். இது நம்முடைய கடமை. ஆகவே அவர்களை கவனிக்கும் பொறுப்பை எடுத்து கொண்டோம்” என்கிறார் சந்திரிகா. இவரது வீடு கேரள மாநிலம் ஒலரியில் உள்ளது. இவர் இல்லாத சமயங்களில் இவரது மகள் கீர்த்தனா, இந்தக் கிளிகளைக் கவனிக்கும் பொறுப்புக்களை எடுத்து கொண்டுள்ளார். இவரது கணவர் உன்னிகிருஷ்ணன் ஒரு இன்ஜினியர். அவரும் இவரது சேவைக்கு உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.