இந்தியா

வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியை!

வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியை!

ச. முத்துகிருஷ்ணன்

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து, ரூ.21 லட்சத்தைப் பறிகொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில வருடங்களாக ஆன்லைன் மூலமாக நடைபெறும் பணமோசடிகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் எல்லாவற்றுக்கும் இணையத்தையே நம்பியிருந்தனர். இதைப் பயன்படுத்தி பெரும்பாலான மோசடியாளர்கள் மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் மூலம் சாதாரணர்களை குறிவைத்து வலை விரித்து அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாரிச் சுருட்டி ஓட்டம் பிடிக்கின்றனர். அப்படியொரு வாட்ஸ் அப் மோசடிச் சம்பவம் ஒன்று ஆந்திரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி நகரில் உள்ள ரெட்டப்பநாயுடு காலனியைச் சேர்ந்த வரலக்‌ஷ்மி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவருக்கு வாட்ஸ்அப்பில் அறியாத தொடர்பில் இருந்து (Unknown Contact) லிங்க் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆர்வமிகுதியில் இவரும் அந்த லிங்கை கிளிக் செய்துவிட, சில நிமிடங்களுக்கு பின் இவரது வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுவதாக மெசேஜ் வரத் துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளூர் போலீசில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

போலீசார் வங்கியைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான ஒப்புதலை வரலக்‌ஷ்மி தான் தந்திருக்கிறார் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த மோசடி லிங்கை கிளிக் செய்ததும் வரலக்‌ஷ்மியின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எப்படி லிங்கை கிளிக் செய்தவுடன் பணம் பறிபோனது என்பது குறித்தும், பணத்தை மீட்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

  • தெரியாத நபர் அல்லது எண்ணிலிருந்து பெறப்படும் இணைப்புகளை (லிங்க்) எந்த சூழ்நிலையிலும் கிளிக் செய்யக் கூடாது.

  • நமக்கு அனுப்பப்பட்டிருக்கும் லிங்கின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும். இதைச் செய்வதற்கு அந்த லிங்கின் url ஐ சரியாகச் சரிபார்க்கவும். அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உள்ள இணைப்புகளை மட்டும் கிளிக் செய்யவும்.

  • உதாரணமாக, 'gov.in.co' அல்லது 'co.com' போன்ற பின்னொட்டுகளை கொண்ட லிங்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.

  • பணப் பலன்களைக் கோரும் இணைப்புகள் அல்லது செய்திகளைக் கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய செய்திகள் பெரும்பாலும் மோசடி செய்பவர்களால் தான் அனுப்பப்படுகின்றன.

  • மேலும் பணப் பலன்களைக் கோரும் இணைப்புகள் அல்லது செய்திகளை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.