இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் ஏற்பதற்கான கெடுவை மே 15 ஆக அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம், வாட்ஸ்அப். பலராலும் பயன்படுத்தப்படும் மொபைல் செயலியாக இருக்கும் இது, சமீபத்தில் அதன் 'பிரைவசி பாலிசி' எனப்படும் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது.
இதன்படி தன் பயனாளிகள் குறித்த தகவல்களை சேகரித்து, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கூறி, புதிய தனியுரிமை கொள்கையை வாட்ஸ்அப் வெளியிட்டது. இந்த புதிய கொள்கையை பிப்ரவரி 8ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் இல்லையெனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது.
இந்த புதிய தனியுரிமை கொள்கை பயனர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியதை தொடர்ந்து, புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்துவதை தள்ளி வைப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அம்மனுவில், “புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையானது இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள மக்களின் தனியுரிமை விதியை மீறுகிறது. அரசின் மேற்பார்வை இல்லாமலேயே வாட்ஸ்அப் பயனரின் தகவல்களை மற்றொரு நிறுவனத்திடம் பகிர்ந்துகொள்கிறது. எனவே இதனை நாட்டில் தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி சஞ்சிவ் சச்தேவா, “வாட்ஸ்அப் ஒரு தனியார் செயலி. வாட்ஸ்அப்பின் விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால் அதில் இணையாதீர்கள். வேறு செயலிகளை உபயோகியுங்கள். அனைத்து மொபைல் அப்ளிகேஷன்களும் இதைத்தான் செய்கின்றன'' என்று கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனியுரிமைக் கொள்கையை கட்டாயப்படுத்துவதை வாட்ஸ்அப் நிறுத்தி வைத்ததுடன் சில மாற்றங்களை செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், வருகிற மே 15ஆம் தேதிக்குள் தனியுரிமைக் கொள்கையை ஏற்க பயனர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறினால், மே 16 முதல் நோட்டிபிகேஷன் மற்றும் அழைப்புகளைப் பெறலாம். ஆனால், மெசேஜ்களை அனுப்பவோ, வரும் மெசேஜ்களை படிக்கவோ இயலாது. மேலும், அடுத்த 120 நாட்களுக்குப் பிறகு பயனரின் கணக்கு அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.