மணிப்பூரில் மெய்தி, குக்கி சமூகத்தவர் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ளது. அண்மையில் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் இறந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ட்ரோன் தாக்குதலை தடுக்க தவறிய மாநில காவல்துறை தலைவரையும் பாதுகாப்பு ஆலோசகரையும் நீக்கக்கோரி மாணவர் அமைப்பினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முற்பட்டபோது இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.
மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் உருவ பொம்மையையும் எரித்தனர். மேலும், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வெறுப்புப்பேச்சுகள், வெறுப்பு வீடியோக்கள் பரப்பப்படுவதால் செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3 மணி வரை இணையசேவைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இம்பாலின் இரு மாவட்டங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தெலங்கானா மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள இரண்டு சிஆர்பிஎஃப் படைகளை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் தற்போது வெடித்திருக்கும் ட்ரோன் மற்றும் ராக்கெட் குண்டு தாக்குதலுக்குப் புதிய காரணம் சொல்லப்படுகிறது. அதாவது, சமீபத்தில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு ஆடியோ வெளியாக இருந்தது. அதில், அவர் மெய்தி இனத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், வன்முறைக்கு, அவரே காரணம் எனவும் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்த ஆடியோ அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு முதல்வர், மறுப்பு தெரிவித்திருந்ததுடன், `இது போலி ஆடியோ' எனவும் தெரிவித்திருந்தார். மாநிலத்தின் ஆளும் பாஜகவைச் சேர்ந்த 10 குகி-சோ எம்.எல்.ஏக்கள் இதுகுறித்து விரைந்து விசாரிக்குமாறு உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததுடன், முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆடியோ விவகாரம்தான் குக்கி இன மக்களைக் கோபப்படுத்தியிருப்பதாகவும், மீண்டும் அவர்களை வன்முறைக்கு வித்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த வருடம் (2023) தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.