இந்தியா

காஷ்மீர் விவகாரம்: அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ என்ன சொல்கிறது?

காஷ்மீர் விவகாரம்: அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ என்ன சொல்கிறது?

webteam

ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 35A குறித்து பார்க்கலாம்.

நமது அரசமைப்பில் சட்டப்பிரிவு 370இன் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு உள்ள அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரங்கள் மாறுபட்டவை. அந்த வகையில் சட்டப்பிரிவு 370இன் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் சட்டப்பிரிவு 35 ஏ உருவாக்கப்பட்டது.

1952ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசுக்கும், ஜம்மு- காஷ்மீருக்கு தலைமை வகித்த ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனடிப்படையில் மத்திய அரசு அளித்த அறிவுரையின் பேரில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 1954ஆம் ஆண்டு சட்டபிரிவு 35 ஏ-வை உருவாக்கி ஆணை பிறப்பித்தார். சட்டப்பிரிவு 35ஏ ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது. இந்தச் சட்டப்பிரிவு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதற்கான வரையறையை நிர்ணயிக்கிறது. நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு சிறப்பு உரிமைகளையும் வழங்குகிறது. 

அரசுப் பணி பெறும் உரிமை, நிலம், வீடு போன்ற சொத்து வாங்கும் உரிமை, அரசு ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகளைப் பெறும் உரிமைகளை அளிக்கிறது. இது நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு சொத்து வாங்க முடியாது, அரசு வேலை கிடைக்காது. ஜம்மு- காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தை சேர்ந்தவரையோ அல்லது நிரந்தர குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படாது, அந்தப் பெண்ணின் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.

சட்டப்பிரிவு 368இன் படி , அரசமைப்பில் எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றாலும் புதிதாக ஒரு பிரிவை ஏற்படுத்துவது என்றாலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே கொண்டு வர முடியும். ஆனால் சட்டப்பிரிவு 35 ஏ நாடாளுமன்றத்திடமே கொண்டு வரப்படவில்லை என்பதால், அரசமைப்பு சட்டத்திற்கே எதிரானது என ஒரு சாரார் கூறி வருகின்றனர்.