newsclick pt web
இந்தியா

டெல்லியில் ஊடக நிறுவனத்தில் சோதனை: “கருத்து சுதந்திரம் தொடர்பானதல்ல” - காவல்துறை விளக்கம்!

டெல்லியில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

PT WEB

வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டில், டெல்லியில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

டெல்லியில் இருக்கும் செய்தி நிறுவனத்தின் ஸ்டூடியோ அவர்களது அலுவலகம் அமைந்துள்ள பகுதி, செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் அதிகாலையில் இருந்தே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கென்று இருக்கக்கூடிய ஏ.எஸ்.பி. தலைமையிலான குழுக்கள் இச்சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். பத்திரிகையாளர்களிடம் இருந்து செல்போன்கள் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.

சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு இந்த செய்தி நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த சோதனை கருத்து சுதந்திரம் சார்ந்த விஷயமாக இல்லாமல் இந்தியாவின் இறையாண்மை தொடர்பாக இருக்குமென்று காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக இந்திய நாட்டிற்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் நீட்சியாக அவர்களது வங்கிக் கணக்குகள் எங்குள்ளது, அவை யார் பெயரில் செயல்படுகின்றன போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையிலும் சோதனை அடுத்தடுத்த கட்டங்களாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி வெளியிட்டது தொடர்பாகவோ கருத்து சுதந்திரம் சார்ந்தோ இந்த சோதனை நடத்தப்படவில்லை என்பதை காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை கைது நடவடிக்கைகள் இல்லாத நிலையில் சோதனையின் முடிவில் கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.