செய்தியாளர்:கௌசல்யா
மத்திய பட்ஜெட்டின் தொடக்கமான அல்வா கிண்டும் விழா ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெற்றாலும் இந்தமுறை காரசாரமான விவாதத்திற்கு உட்பட்டிருக்கிறது. அல்வா கிண்டும் சுவாரஸ்யமான நிகழ்வு எதற்காக தொடங்கப்பட்டது? தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுபோல, இந்த ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வாவை கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படம்தான் மக்களவையில் காரசார விவாத பொருளாக மாறியது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முந்தைய அல்வா கிண்டும் நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படத்தை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கையில் வைத்து காட்டி மக்களவையில் பேசினார். அப்போது, அந்த புகைப்படத்தில் இருந்தவர்களின் பெயர்களை வட்டமிட்டு காட்டிய ராகுல் காந்தி இந்த நிகழ்வில் கூட எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்த யாரும் பங்கெடுக்க இயலாத நிலை தான் இருக்கிறது என விமர்சனம் செய்தார்.
இதற்கு, பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த ஒரு நல்ல பணியை தொடங்கும்போதும் இனிப்பு பரிமாறிக்கொள்வது நம் பாரம்பரியம் என்றும் அது ஏன் புகைப்பட நிகழ்வாக மாறியது? எனவும் கேள்வி எழுப்பினார்.
2013-14ஆம் ஆண்டில் காங்கிரஸ் அமைச்சரவையில் எஸ்சி, எஸ்டிக்களின் பிரதிநிதித்துவம் குறித்து ராகுல்காந்தி ஏன் விசாரிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இப்படி காரசாரமான விவாதம் மக்களவையில் நடந்தேறிய நிலையில், பட்ஜெட் தயாரிக்கும் பணிக்கும் அல்வா கிண்டும் நிகழ்விற்கும் என்ன தொடர்பு? எதற்காக? எப்போது? இந்த விழா தொடங்கப்பட்டது என தெரிந்துகொள்ள 74 ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.
பிரிட்டிஷ் கால நடைமுறையின்படி, 1950ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் மாளிகையில்தான் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, பட்ஜெட் தொடர்பான விவரங்கள், தொழில்துறையினருக்கு முன்கூட்டியே கசியவிட்டதாக,பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராக இருந்த ஜான் மத்தாய் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதன்காரணமாக, அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக, பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகள், டெல்லி மிண்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வெளியுலக தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தும் நடைமுறை தொடங்கப்பட்டது.
9 முதல் 10 நாட்கள் வரை நிதியமைச்சக அதிகாரிகள் டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் தனிமைப்படுத்தப்படுவர். 1980ஆ ம் ஆண்டு முதல், இந்த இடத்தில்தான் பட்ஜெட் அச்சிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதி முழுவதும், கோட்டைபோல பாதுகாக்கப்படும். இதுபோன்ற கடினமான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, விழா நடைபெறும். இந்த விழாவில், பெரிய கடாயில் அல்வா கிண்டுவதும், அதனை நிதியமைச்சரே ஊழியர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதும் நடைபெறும். இதுதான் அல்வா கிண்டும் கதையின் தொடக்கம்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதுகுறித்து நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல... பொதுவெளியிலும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கும் சிலர், வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல குறுகியகால மூலதன ஆதாய வரியை உயர்த்தியிருப்பதை விமர்சிக்கவே செய்கின்றனர்.