இந்தியா

மேற்கு வங்கத்தை மீண்டும் மையம்கொண்ட 'நாரதா' ஊழல் வழக்கு... வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

மேற்கு வங்கத்தை மீண்டும் மையம்கொண்ட 'நாரதா' ஊழல் வழக்கு... வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

நிவேதா ஜெகராஜா

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டு அமைச்சர்கள், சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு காரணமாக அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நாரதா ஊழல் வழக்கில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

மேற்கு வங்க அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீச தொடங்கியுள்ளது. இந்த முறை புகழ்பெற்ற நாரதா ஊழல் வழக்கின் மூலம் மீண்டும் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாரதா ஊழல் வழக்கில் தொடர்புடைய மம்தாவின் அரசில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி ஆகியோருடன் மதன் மித்ரா எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை இன்று அதிரடியாக சிபிஐ கைது செய்துள்ளது. தற்போது இவர்கள் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில், சிபிஐ அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தர்ணா செய்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. முன்னதாக மம்தா, அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீமின் வீட்டுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதுடன், 'சபாநாயகர் மற்றும் மாநில அரசின் அனுமதியின்றி அமைச்சர்களை கைது செய்தது தவறு. இதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? தன்னையும் முடிந்தால் கைது செய்யுங்கள்' என்று கோஷமிட்டார் அவர். இது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா அங்கு திரண்டதை அறிந்த திரிணாமூல் தொண்டர்களும் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

முன்னதாக ஆளுநர் அனுமதியின் பேரிலேயே இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. நாரதா ஊழல் வழக்கில் நீண்ட காலமாகவே விசாரிக்கப்பட்டு வரும் இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யும் முயற்சியாகவே இந்த அதிரடி கைது நிகழ்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால், இதே வழக்கில் தொடர்புடையவர்களும் தற்போது திரிணாமூல் காங்கிஸில் இருந்து பாஜகவில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் ஏன் கைது செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நாரதா ஊழல் வழக்கு என்ன?

மேற்கு வங்கத்தில் அதிகம் சர்ச்சைகளை சந்தித்த ஒரு விவகாரங்களில் ஒன்று இந்த நாரதா ஊழல் வழக்கு. மேற்கு வங்கத்தில் நாரதா செய்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஸ்டிங் நடவடிக்கைகளை தொடர்ந்தே இந்த ஊழல் வழக்கு வெளிவந்த வந்தது. இந்தச் சம்பவம் நடந்தது கடந்த 2014-ஆம் ஆண்டு.

அப்போது டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்ற நாரதா செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர், தான் பத்திரிகையாளர் என்பதை வெளிப்படுத்தாமல், தன்னை தொழிலதிபர் என்று அப்போது ஆண்ட திரிணாமூல் தலைவர்கள், அமைச்சர்கள் என பலதரப்பட்ட அரசு பிரதிநிதிகளிடம் தன்னை அடையாளப்படுத்தி கொண்டு அவர்களிடம் கொல்கத்தாவில் முதலீடு செய்ய உதவ வேண்டும் எனக் கூறி லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதனை ரகசிய வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டார்.

2014-ல் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ, 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே வெளியானது. அப்போது பெரும் புயலை கிளப்பிய இந்த வீடியோவில், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் உட்பட 7 எம்.பிக்கள், ஒரு எம்.எல்.ஏ. மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மொத்தம் இந்த வீடியோ காட்சிகள் 52 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் அமைந்திருந்தது. 2016 மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்னதாக இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. ஏற்கனவே டி.எம்.சியின் மூத்த அமைச்சர்கள் பல கோடி ரூபாய்க்கான 'சாரதா மற்றும் ரோஸ் வேலி சிட் ஃபண்ட்' ஊழலில் சிக்கியிருந்த நேரத்தில் இது வெளியானது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த தேர்தலில் அக்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது.

நாரதா வழக்கில் தொடர்புடையவர்கள் யார்?

அப்போதைய மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் உட்பட 7 எம்.பிக்கள், ஒரு எம்.எல்.ஏ. மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் 12 பேர் நாரதா வழக்கில் தொடர்புடையவர்கள். கேமராவில் சிக்கிய தலைவர்களில் சுப்ரதா முகர்ஜி, சோவன் சாட்டர்ஜி, மதன் மித்ரா, ஃபிர்ஹாத் ஹக்கீம், சவுகடா ராய், ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் பிரசுன் பானர்ஜி ஆகியோர் அடங்குவர்.

இதேபோல் சமீபத்தில் திரிணாமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவின் முக்கிய தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் மாறியுள்ள சுவேந்து ஆதிகாரி, அதேபோல் முகுல் ராய் போன்றோரும், அந்த வீடியோவில் லஞ்சம் வாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மூத்த போலீஸ் அதிகாரி எம்.எச். அகமது மிர்சாவும் பணத்தை ஏற்றுக்கொண்டது தெரிந்தது. ஸ்டிங் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போது மிர்சா பர்த்வான் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார். இந்த வழக்கில் 2019 ல் கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை சிபிஐ எப்போது ஏற்றுக்கொண்டது?

மார்ச் 2017-ல், நாரதா வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ மூலம் பூர்வாங்க விசாரணை நடத்த உத்தரவிட்டது. தேவைப்பட்டால், வழக்கில் தொடர்புடையவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு சி.பி.ஐக்கு அறிவுறுத்தியது. உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தக் கோரி மேற்கு வங்க அரசு பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இருப்பினும், விசாரணையை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மம்தா மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற போது தற்போது கைது செய்யப்பட்ட இரண்டு அமைச்சர்களும் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

ஆனால், அவர்களை கைது செய்யக்கோரி தேர்தலுக்கு முன்பாகவே ஆளுநர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படியே தற்போது கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளதாக சிபிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோரின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

- மலையரசு