பாபா சித்திக் படுகொலை web
இந்தியா

மும்பையை உலுக்கிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை! பின்னணி என்ன?

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை அம்மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. ஒருபுறம் இரங்கல்கள் கூறப்படும் நிலையில் மறுபுறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என மாநில அரசு மீது விமர்சனக் கணைகள் பாய்ந்து வருகின்றன.

PT WEB

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக ஹரியானாவை சேரந்த குர்மயில் பல்ஜித் சிங் (Gurmail Baljit Singh), உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் கஷ்யப் (Dharmaraj Rajesh Kashyap) என்ற இரு இளைஞர்களை காவல் துறை கைது செய்துள்ளது.

கொலைக்கு காரணம் தொழிற் போட்டியா அல்லது குடிசைமாற்று வாரியம் தொடர்பான சர்ச்சையா என பல்வேறு கோணங்களில் காவல் துறை விசாரித்து வருகிறது.

ஒய் பிரிவு பாதுகாப்பு இருந்தபோதும் சுட்டுக்கொலை..

பாபா கொலை குறித்த விசாரணைக்கு உதவ டெல்லியிலிருந்தும் காவல் துறையினர் மும்பை வந்துள்ளனர். மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதலமைச்சர்கள் ஃபத்னவிஸ், அஜித் பவார் ஆகியோரும் தங்கள் இரங்கல்களையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர். ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ள நபர் சுட்டு படுகொலை செய்யப்பட்டது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை காட்டுவதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாபா சித்திக்

மல்லிகார்ஜுன் கார்கே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் மகாராஷ்டிர அரசு மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்காக மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. கொல்லப்பட்ட பாபா சித்திக் சல்மான் கான், ஷாருக் கான், சஞ்சய் தத் போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கும் நெருக்கமானவர் என்பதால் திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.