ஆண்களின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் ஏதுவும் இல்லை. இந்நிலையில்
18 வயது நிரம்பிய ஆண் வாக்களிக்கவும், ராணுவத்தில் சேரவும் அனுமதிக்கும் போது, ஏன் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் 18 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்தால் விசாரிக்கிறோம் என உச்சநீதிமன்றம் கருத்தும் தெரிவித்துள்ளது.
2006-ல் இயற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடை சட்டத்தில், 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு திருமணம் நடந்தால் அத்திருமணம் செல்லாது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் 15 வயதுக்கு உட்பட்டவருடன் உடல் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்,பெண் இரு பாலாருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் தொடர்பாக, ஏற்கெனவே ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம், 16 வயது முதல் 18 வயதுக்குள் திருமணம் நடந்தால் கணவன், மனைவி இருவரது சம்மதத்துடன் அத்திருமணத்தை சட்டப்படி ரத்து செய்யலாம் என சட்ட அமைச்சகத்திடம் பரிந்துரை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.