வட மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னொருபக்கம் கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் போதுமான மழை இல்லாத நிலையில் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே கையிருப்பில் உள்ள அரிசியை இந்திய அரசு பத்திரமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் விலை உயர்வை உள்ளூர் சந்தைகளில் அரசு கட்டுப்படுத்த இயலும்.
சர்வதேச நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதில் 40 சதவீதப் பங்கை இந்தியா வகிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பாசுமதி அல்லாத அரிசியின் அளவு 17.86 மில்லியன் டன்களாகும். கடந்த ஜூலை 1 நிலவரப்படி, இந்தியாவில், பாசுமதி அல்லாத அரிசி 41 மில்லியன் டன் அளவுக்கு இருப்பு உள்ளது. உள்ளூர் பொது விநியோகம் மற்றும் வெளிச்சந்தை வர்த்தகத்தை பாதிக்காத அளவு இது.
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்படாது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாசுமதி அல்லாத அரிசியை இந்தியாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யும் 50 நாடுகளில் அமெரிக்கா 34ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து ஒரு ஆண்டுக்கு 27 ஆயிரம் டன்கள் அரிசியை மட்டுமே அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.
உண்மையிலேயே அரிசி ஏற்றுமதித் தடையால் பாதிக்கப்படும் நாடுகள் நேபாளம், வங்கதேசம், மடகாஸ்கர், பெனின், கென்யா, ஐவரி கோஸ்ட், மலேசியா, வியட்நாம், ஐக்கிய அரேபிய நாடுகள்தான். இந்தியாவின் அரிசியை அதிகம் நம்பியிருக்கும் நாடான நேபாளம் 4.57 லட்சம் டன்கள் அரிசியை இறக்குமதி செய்கிறது.
அரிசியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில் சீக்கிரமே அறுவடைப் பருவம் வரவுள்ளதால் சர்வதேச அளவில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது