முதலமைச்சர் சித்தராமையா pt
இந்தியா

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தலைவலி.. பின்னணியில் நடந்தது என்ன?

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவி தொடர்பான பேச்சுகள் கர்நாடகாவில் மீண்டும் எழத் தொடங்கி இருக்கின்றன

PT WEB

கர்நாடக காங்கிரசில் முதலமைச்சர் மாற்றம் குறித்து சர்ச்சைக்குள்ளாவது புதிய விஷயம் அல்ல. முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அவ்வப்போது பொது இடங்களில் கருத்துத் தெரிவித்து, கட்சி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாவது வழக்கம்.

சித்தராமையா

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவி தொடர்பான பேச்சுகள் கர்நாடகாவில் மீண்டும் எழத் தொடங்கி இருக்கின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி 9 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. மேலும், பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரின் தம்பி சுரேஷ் தோல்வியை தழுவினார்.

சுரேஷின் தோல்விக்கு முதலமைச்சர் சித்தராமையா மறைமுக காரணம் என டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை காரணமாக வைத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையாவை இறக்க திரைமறைவில் காய் நகர்த்துவதாகவும் சித்தராமையா தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சித்தராமையா

டிகே சிவகுமாரின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், கூடுதல் துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கும்படி, சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். சில சட்டமன்ற உறுப்பினர்கள் டிகே சிவகுமார் முதலமைச்சராக வேண்டும் என்று கூறினர். சிலர் சித்தராமையாவே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்று கூறினர். இதனால் கட்சிக்கு தலைவலி ஏற்பட்டது.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதலமைச்சர் பதவி குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்க, சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. இந்த கூட்டத்தின்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி குறித்து யாரும் பேசக்கூடாதென, வாய் பூட்டுப் போடுமாறு சித்தராமையாவிடம் கட்சி மேலிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனிடையே, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி குறித்து பேசுபவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்படுமென டிகே சிவகுமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது பேச்சை பொருட்படுத்தாமல் சில அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப டிகே சிவகுமார் தயாராகி வருவதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.