evm machine pt web
இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 1 | மெஷின் வந்தது ஏன்? வரலாற்றில் நடந்தது என்ன? ஏன் சர்ச்சையானது..?

1982 ஆம் ஆண்டு மே 19 அன்று கேரளாவில் உள்ள பரூர் சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

Angeshwar G

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு இன்றளவும் நீடிக்கிறது. பாஜக ஆட்சியில் இருந்தால் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜக-வும் மாற்றிமாற்றி தங்களது அதிருப்திகளை மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தெரிவித்து வந்துள்ளன. தங்களது தேர்தல் தோல்விகளுக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களைக் குறைக்கூறி வந்துள்ளன. தற்போதும் அந்த சர்ச்சை நீடிக்கிறது.

முதல் தேர்தல்

சுதந்திர இந்தியாவில் சட்டமன்றம் நாடாளுமன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தல்கள் நடத்தப்பட்ட சமயத்தில், வயது வந்தோருக்கான வாக்களிக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அப்போது பெரும்பாலானோருக்கு கல்வியறிவு சென்று சேர்ந்திடாத நிலை இருந்தது. அதனால் வாக்குச்சீட்டுகளில் வாக்களிக்கும் முறைகளுக்கு பதிலாக அனைத்து வேட்பாளர்களுக்கும் தனித்தனி வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து வாக்காளர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொதுவான வாக்குச்சீட்டை வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர்களின் பெட்டிகளில் போடுவர்.

ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் சின்னங்களை ஒதுக்குவது இன்னும் எளிதான வழிமுறை என தோன்றியதால், சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வாக்குப்பெட்டிகளின் மேல்புறம் ஒட்டப்பட்டிருந்தது. வாக்குச்சீட்டுகள் ஒரே அளவுடையதாகவும் வெவ்வேறு வண்ணங்களிலும் இருந்தன. 1952 மற்றும் 1957 என இரு தேர்தல்களில் இந்த முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குச்சீட்டுகளில் தேர்தல்

இந்த தேர்தல் முறைகளில் சில சிக்கல்கள், சந்தேகங்கள் எழுந்ததால் 1960- 1961 ஆம் ஆண்டுகளில் கேரளா மற்றும் ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளில் முத்திரையிட்டு வாக்களிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்த முறை 1999 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

இந்த நடைமுறையிலும் சில சிக்கல்கள் எழுந்தன. வாக்குகளை எண்ணும் நேரம் அதிகரித்த வண்ணமே இருந்தது. வாக்காளர்கள் தங்களது முத்திரைகளை இடும்போது இரு வேட்பாளர்களுக்கு இடைப்பட்ட இடத்தில் முத்திரையிட்டுவிட்டால் அதை யாருக்கான வாக்கு என முடிவெடுப்பதில் சிக்கல்கள் எழுந்தன. இதனால் வாக்குகள் நிராகரிக்கப்படுவது அதிகளவில் இருந்தது. மேலும் இந்த முறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஆங்காங்கு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் சம்பவங்களும் நிகழ்ந்தன.

அறிமுகப்படுத்தப்பட்ட EVM

இந்நிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தான தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 1982 ஆம் ஆண்டு மே 19 அன்று கேரளாவில் உள்ள பரூர் சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. அத்தொகுதியின் 50 வாக்குச்சாவடிகளில் சோதனை நடவடிக்கையாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இங்கும் நீதிமன்றங்களில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து வழக்குகள் தொடரப்பட்டன.

இதின் சாதக, பாதக அம்சங்களென்ன? வழக்குகள் என்ன ஆனது? இயந்திரத்தை தயாரித்தது யார் என்பன போன்ற தகவல்களை எல்லாம் அடுத்தடுத்த அத்தியாங்களில் விரிவாக பார்க்கலாம்..