தேர்தல் பத்திரம் முகநூல்
இந்தியா

தேர்தல் பத்திரம் என்றால் என்ன? எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன?

தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவை எப்போது எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன, தேர்தல் பத்திரம் என்றால் என்ன, எந்தெந்த கட்சிகள் அத்திட்டத்தின் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்பதையெல்லாம் விரிவாக பார்க்கலாம்.

PT WEB

தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது?

கடந்த 2017-18ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களுக்காக பெறப்பட்ட தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிக்கும் நடைமுறையை மாற்றுவதற்காகவும், அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வு என அப்போது சொல்லப்பட்டது. கறுப்புப் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் எனவும் மத்திய அரசு கருதியது. தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதாவை சார்ந்தது அல்ல என்பதால் மக்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது கவனிக்கதக்கது.

எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதிபெற்றுள்ளன?

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதிபெற்றுள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்ற கட்சிகளில் முதல் இடத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது. அக்கட்சி 2017-18 ல் 210 கோடி ரூபாய் நிதியாக பெற்றுள்ளது. 2019-20 ல் 2 ஆயிரத்து 555 கோடி பெற்ற நிலையில், 2022-23 ல் 1294 கோடி ரூபாய் நிதியாக பெற்றுள்ளது.

பாஜக, தேர்தல் பத்திரம்

அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இக்கட்சி 2017- 18  ல் 5 கோடி ரூபாய் பெற்ற நிலையில், 2018, 19 ல் 383 கோடி ரூபாயை நிதியாக பெற்றுள்ளது. 2022-23 ல் காங்கிரஸ் பெற்ற தேர்தல் நிதி 171 கோடி ரூபாயாக இருக்கிறது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 2021-22 ல் 528 கோடி ரூபாயும், 2022- 23 ல் 325 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி 2018-19 ல் 29 கோடியும் 2019-20 ல் 21 கோடியும், 2021-22 ல் 14 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. 

முன்பு TRS ஆகவும் தற்போது BRS ஆகவும் உள்ள சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி 2018-19 ல் 142 கோடியும், 2021-22 ல் 153 கோடி ரூபாயும் நிதியாக பெற்றுள்ளது.

பிஜூ ஜனதா தள் கட்சி 2018-19 ல் 214 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்ற நிலையில், 2021-22 ல் 291 கோடி ரூபாயும், 2022-23 ல் 152 கோடி ரூபாயும் நிதியாக பெற்றுள்ளது.

திமுகவை பொறுத்தவரை 2017-18 மற்றும் 2018-19 ல் தேர்தல் நிதி பெறவில்லை. 2019 -20 ல் 46 கோடி ரூபாயும், 2021-22 ல் 306 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. 2022- 23 ல் 185 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை 2019-20 ல் மட்டும் 6 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.