இந்தியா

டெல்லியை உலுக்கும் புதிய மதுபான கொள்கை முறைகேடு; மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு என்ன?

டெல்லியை உலுக்கும் புதிய மதுபான கொள்கை முறைகேடு; மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு என்ன?

JustinDurai

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ.

டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அவர் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு, துணை முதல்வர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மணிஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு என்ன?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. புதிய கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

மதுபான கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சியுமான கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில்தான் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிஷ் சிசோடியா காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மணிஷ் சிசோடிய அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. விசாரணைக்கு உரிய முறையில் அவர் ஒத்துழைக்கவும் இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் உணர்ந்தனர். ஆதாரங்களை காட்டி கேள்வி எழுப்பப்பட்ட போதும் மழுப்பலான பதில்களை கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என அதிகாரிகள் கருதினர். எனவே அவர் கைது செய்யப்பட்டார். நாளை (இன்று) நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா கைது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “அவர் நிரபராதி. இது கேவலமான அரசியல்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்த நாள் ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், சிசோடியாவின் கைதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் தெரிவித்துள்ளார்.