கடந்தாண்டு ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து, உலகையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் ரயில் விபத்து ஒன்று அரங்கேறி உள்ளது. மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி அருகே இன்று (ஜூன் 17) காலை 8.30 மணியளவில், இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. மேலும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் சென்றதே இவ்விபத்திற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
நமது நாட்டில் இதுபோன்ற ரயில் விபத்துகள் நடைபெறும் போதெல்லாம் கவாச் தொழில்நுட்பம் பற்றிய பேச்சுகள் எழும். பொதுவாக, கவாச் என்பது தண்டவாளங்களில் இரண்டு ரயில்கள் மோதுவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த கவாச் அமைப்பு ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும்.
முதன்முதலில் தெற்கு சென்ட்ரல் ரயில்வேயில் லிங்கம்பல்லி - விகாராபாத் - வாடி மற்றும் விக்காராபாத் - பிதார் பகுதிகளில் 250 கிலோமீட்டர் தூரத்திற்கு கவாச் தொழில்நுட்பம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. அதன் செயல்திறன் உறுதியானதன் அடிப்படையில் இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுமைக்கும் கவாச் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த மூன்று நிறுவனங்களுக்கு அதனை உருவாக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மூன்று இந்திய நிறுவனங்களுடன் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பால் (RSCO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை அம்சமாகும். அதாவது, ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறினால் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். மேலும், தண்டவாளத்தில் உள்ள ஆபத்துகளை அடையாளம் காணவும் கவாச் சிஸ்டம் ஓட்டுநர்களுக்கு உதவுகிறது.
மேலும் இது அடர்ந்த மூடுபனி உள்ளிட்ட தெளிவு இல்லாத சூழல்களிலும் ரயில்களை இயக்கவும் உதவுகிறது. இந்த அமைப்பு முக்கியமாக RFID அதாவது, ரேடியோ அதிர்வெண் அடையாளம் மூலம் இயங்குகிறது. இந்த RFID ரயில் பாதைகளிலும் ரயில் நிலையங்களிலும் வைக்கப்படும். அதைவைத்தே ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வருகிறதா என்பது கண்டறியப்படுகிறது.
குறிப்பிட்ட வழித்தடத்தில் ஒரே டிராக்கில் 5 கிமீ தொலைவில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்தால், அவை அனைத்தும் இந்த கவாச் அமைப்பின் மூலம் நிறுத்தப்படும். அருகில் உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பாதுகாப்பாகச் செல்வதை இது உறுதி செய்யும். மேலும் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் சிக்னலை தெளிவாகப் பார்க்கவும் இது ரயில் ஓட்டுநர்களுக்கு உதவும்.
அப்படியான கவாச் தொழில் நுட்ப அமைப்பு இந்திய ரயில்வேயிடம் இருந்தும், மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நடைபெற்றது எப்படி என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. விபத்து நடைபெற்ற கவுஹாத்தி மார்க்கத்தில், கவாச் அமைப்பு செயல்படுத்தப்படவில்லை. இதனாலேயே அங்கு விபத்து நடந்துள்ளது. கவாச் அமைப்பு மட்டும் இருந்திருந்தால் இந்த விபத்து நடைபெற்றிருக்காது.
இதையும் படிக்க: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல்.. களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி!
இந்தியாவில் மொத்தமுள்ள 1 லட்சம் ரயில் பாதைகளில், சுமார் 1,500 கிமீ ரயில் பாதைகளில் மட்டுமே கவாச் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. 2022-23ஆம் ஆண்டில் கவாச்சின் கீழ் 2,000 கிமீ ரயில் வலையமைப்பைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது மற்றும் சுமார் 34,000 கிமீ ரயில் வலையமைப்பைக் கடக்க இலக்கு வைத்திருந்தது.
அடுத்த ஆண்டுக்குள் 6,000 கி.மீ.க்கு மேல் தண்டவாளங்களை கடக்கும் இலக்கின்கீழ், டெல்லி - கவுஹாத்தி வழித்தடத்தில் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு கவாச் மூலம் பாதுகாக்கப்படும் 3,000 கி.மீ. பாதைகளுக்குள் மேற்கு வங்கமும் குறிப்பிடத்தக்கது.