katchatheevu issue PT
இந்தியா

இந்தியாவுக்கு கிடைத்தது 4000 ச.கி.மீ! கச்சத்தீவு விவகாரத்தின் பின்னணியில் இவ்வளவு உண்மைகள் இருக்கா!

PT

செய்தியாளர் பாலவெற்றிவேல்

கச்சத்தீவு ஏன் தாரைவாக்கப்பட்டது? கச்சத்தீவு கொடுக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன...? அது ஏன் இப்போது மீண்டும் பிரச்சனைக்குரியதாக மாறி உள்ளது? என்ற பல கேள்விகளுக்கு இந்த தொகுப்பில் விளக்கமாக பார்க்கலாம்.

கச்சத்தீவு : பரப்பளவு - 285 ஏக்கர் மற்றும் 20 சென்ட் தீவு...

இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள்தான்.

1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார்.

ப.சிதம்பரம், கச்சத்தீவு

கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

கச்சத்தீவு ஏன் தாரைவாக்கப்பட்டது ?

1920 ஆம் ஆண்டுகளில் இருந்து கச்சத்தீவு மீதான ஆர்வம் இலங்கைக்கு அதிகரித்தது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சேதுபதி மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின்னர் இந்திய அரசாங்கத்தின் வசம் வந்தது.

1970களில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இலங்கையின் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகவுக்கும் நல்ல நட்புறவு இருந்தது. "கச்சத்தீவு தொடர்பான பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் முறிந்துபோனது. அந்தத் தீவின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமையை விட்டுத்தர வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளின் குழு பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியது.

மோடி, கச்சத்தீவு

இந்தப் பின்னணியில்தான், 1974 ஜூன் 28ஆம் தேதி இந்திய அரசும் இலங்கை அரசும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. கச்சத் தீவு இலங்கைக்குச் செல்லும்படி இந்தக் கோடு வரையறுத்தது. இருந்தபோதும், அங்கே மீன் பிடிக்கும் உரிமையும் யாத்ரீகர்கள் அந்தத் தீவுக்கு விசா இன்றி செல்லும் உரிமையும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது ஒப்பந்தம் இது தொடர்பாக கையெழுத்தானது. அதன்படி, "இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்டிபிடிக்க மாட்டார்கள்" என்று கூறியது. இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து, நெருக்கடி நிலை காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் கையெழுத்தானது.

கச்சத்தீவு விவகாரம் ஏன் இப்போது மீண்டும் பிரச்சனைக்குரியதாக மாறி உள்ளது?

ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகை பகுதியாக இருந்து வந்த கச்சத்தீவு, இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதன் பின்னணி குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கோரினார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், கச்சத்தீவை இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே, இலங்கை உரிமை கோரியதாக கூறப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் ஆர்.டி.ஐ.-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவில் 1973ஆம் ஆண்டு நடந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக்கப்பட்டதாகவும், அதற்கு மறுஆண்டில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஐ தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கச்சீத்தீவை காங்கிரஸ் அலட்சியத்துடன் தாரை வார்த்தது அம்பலமாகியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கேள்வி 2015 ஆம் ஆண்டு ஆட்சியில் கேட்கப்பட்டபோது நாடு 2015-ல் ஆர்.டி.ஐ.யில் கேட்கப்பட்ட கேள்விக்கு கச்சதீவு இலங்கைக்கு சொந்தம் என வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்தது. கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015-ல் நியாயம் என விளக்கியிருந்தார் ஜெய்சங்கர். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சரியே என்று 2015-ல் கூறிய ஜெய்சங்கர் இப்போது அந்தர் பல்டி அடிப்பதாக பா. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.