கர்நாடக நிலச்சரிவு ட்விட்டர்
இந்தியா

கர்நாடகா | கலங்கடித்த நிலச்சரிவு... சிக்கியவர்களின் நிலை என்ன? மீட்புப் பணியில் பின்னடைவா?

Jayashree A

கர்நாடக மாநிலம் மங்களூரு - கோவா வழித்தடத்தில், அங்கோலா என்ற பகுதி உள்ளது. இதன் அருகே ஷிரூரில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியபடி தேசிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. அதன் அருகேயே கங்காவலி ஆறு ஓடுகிறது. கடந்த ஜூலை 16ம் தேதி, காலை 8.30 மணியளவில் அப்பகுதியில் திடீரென பெரும் சத்தத்துடன் ஏற்பட்ட நிலச்சரிவால் அத்தேசிய நெடுஞ்சாலையானது மணலாலும் பாறைகளாலும் மூடப்பட்டுள்ளது. அச்சமயத்தில் நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டன.

கர்நாடக நிலச்சரிவு

உடனடியாக கர்நாடக மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். அதில் அங்கே டீக்கடை நடத்திவந்த ஒருவர், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள், மேலும் ஒரு உறவினர் என 5 பேரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் ஒருவரும் அங்கு சடலமாக மீட்கப்பட்டார். இவருடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டார். இப்படியாக 7 பேரின் உடல்களையும் மீட்டனர். இதனிடையே அப்பகுதியில் சிக்கிய மேலும் பலரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர்.

அப்படி இதுவரை மீட்கப்படாத ஒருவர்தான் கேரளாவை சேர்ந்த அர்ஜூன். இவர் தனது லாரியில் கிட்டத்தட்ட 200 டன் எடைக்கொண்ட மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியே சென்ற போது நிலச்சரிவில் சிக்கிக்கொண்டுள்ளார். இவருடன் சேர்த்து இவரின் லாரியையும் காணாததால், ‘கனரகமான லாரியோடு நம் மகன் புதைந்துவிட்டானோ’ என கவலைப்பட்ட அவரது தாயார் அஞ்சு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தன் மகனை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தார்.

உடனடியாக பினராயி விஜயன் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே... காணாமல் போனவர்களை மீட்கும் பணி வேகமெடுத்தது. ஆனால் அங்கு தொடரும் தீவிர மழையினாலும், ஆற்றின் வெள்ளப்பெருகாலும் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காணாமல் போனவர்களின் நிலை குறித்து கர்நாடக அரசு கவலை தெரிவித்து வந்தது.

அர்ஜூன்

இதற்கிடையே ‘கர்நாடக அரசு சரியாக மீட்பு பணியினை மேற்கொள்ளவில்லை’ என்று அர்ஜூனின் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். அவர்கள் உயர்நீதிமன்றத்தை அனுக சொல்லவே, கர்நாடக உயர்நீதிமன்றம் ‘இவ்விவகாரத்தில் மத்திய மாநில அரசை விளக்கம் தரவும்’ என்று கூறி நோட்டீஸ் அனுப்பியது. இதில் மாநில அரசு தங்கள் தரப்பு விளக்கத்தை தாக்கல் செய்துவிட்டது. அது நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இப்படியாக வழக்கு பேசுபொருளானதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படை வீரர்கள், தீயணைப்புத் துறையினர், ராணுவத்தினர், மீட்புக் குழுவினர் இன்னும் துரிதமாக செயல்படத்தொடங்கினர். இருந்தபோதிலும் கடந்த 10 நாளாக அர்ஜூன் உட்பட பிறரின் நிலை என்ன ஆனது என்று தெரியவரவில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் கங்காவலி ஆற்றில் சில மரக்கட்டைகள் மிதந்து வந்ததாக கூறவே அர்ஜூன் லாரி கங்காவலி ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதலானது நடந்து வருகிறது.

அதன்படி இன்று 15 பேர் கொண்ட ஸ்கூபா குழுவினர் களத்தில் இறக்கப்பட்டனர். முதலில் ஆற்றின் வெள்ளத்தை கண்டு மீட்புப்படையினரேவும் தயங்கினர். இருப்பினும், ஆற்றினுள் இறங்கி நம்பிக்கையோடு தேடினர்.

இந்நிலையில் இன்று ஆற்றின் 20 அடி ஆழத்தில் அர்ஜூனின் லாரி பகுதியானது சேற்றில் புதையுண்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு மீட்புக்குழு குவிந்துள்ளது. இருப்பினும் அர்ஜூன் மற்றும் காணாமல் போன பிறரின் நிலை என்ன என்பது இப்பொழுது வரை தெரியவில்லை.

தற்போதுவரை சடலமாக மீட்கப்பட்டவர்களில் கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சின்னப்பன், முருகன் என்ற லாரி ஓட்டுநர்களும் அடக்கமென்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன / மீட்கப்படாத சிலரில், ஒருவர் தமிழகம் நாமக்கல்லை சேர்ந்த சரவணன். இவரும் லாரி டிரைவர்தான்.
நிலச்சரிவில் சிக்கிய நாமக்கல் சரவணன்

இன்று தேடுதலில் இடுப்பிற்கு கீழ் இருக்கும் ஒரு ஆணின் உடல் பாகம் கிடைத்திருப்பதாகவும், அது சரவணனின் உடல் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

“DNA சோதனையின் முடிவில் அது யாருடைய உடல் என்பது தெரிய வரும். சரவணின் தாயாரிடம் டி.என்.ஏ பெறப்பட்டுள்ளது. இரு டி.என்.ஏ.க்களும் ஒன்றாகும்பட்சத்தில், உடலில் கிடைத்த பாகங்களை ஒப்படைப்போம். சரவணின் குடும்பத்துடன் மாவட்ட நிர்வாகம் எப்போதும் இருக்கும்” என்று நாமக்கல் ஆட்சியர் உமா கூறியிருக்கிறார்

தொடர்ந்து வரும் தேடுதலுக்கிடையே சின்னப்பன், முருகன் மற்றும் சரவணின் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.