நவம்பர் 12: Brahmkhal-Yamunotri நெடுஞ்சாலையில் Silkyara-Dandalgaon இடையே சுரங்கவழிப்பாதையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவால், சுரங்கத்திற்குள்ளேயே தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு முயற்சிகளைத் தொடங்கியது. உள்ளே சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், மின்சாரம், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை ஏர் கம்ப்ரெஸ்ட் குழாய்கள் மூலம் அனுப்பவும் ஏற்பாடு செய்தனர். NDRF, SDRF, BRO, திட்டத்தின் நிர்வாக நிறுவனமான NHIDCL மற்றும் ITBP ஆகியவையும் மீட்பில் இணைந்தன.
இரண்டாம் நாள்..
நவம்பர் 13: உள்ளே சிக்கி உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. ஆக்சிஜன் செல்வதற்கான குழாய் மூலம் தொழிலாளர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் மீட்பு முயற்சியில் சிக்கல் ஏற்பட்டது.
நவம்பர் 14: 80 சென்டிமீட்டர் மற்றும் 90 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட எஃகு குழாய்கள் சுரங்கப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், நிலம் சற்று உள்வாங்கியதால் இடிபாடுகள் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
நவம்பர் 15: முதலில் கொண்டுவரப்பட்ட ட்ரில்லிங் இயந்திரத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், NHIDCL நிறுவனம் ஆகர் இயந்திரத்தை கொண்டுவருமாறு கோரியது. இதனால் டெல்லியில் இருந்து ஆகர் இயந்திரம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.
நவம்பர் 16: ட்ரில்லிங் இயந்திரத்தின் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு நள்ளிரவுக்கு மேல் வேலை செய்யத் தொடங்கியது.
நவம்பர் 17: இரவு முழுவதும் துளையிட்டதில் 57 மீட்டர் நீள இடிபாடுகளின் ஊடே 24 மீட்டர் அளவுக்கு குழாய்கள் பொருத்தப்பட்டன. ஆனால் ஐந்தாவது குழாயை பொருத்தும்போது, கடினமான பகுதியின்மீது இடித்ததால் பணிகள் தடைபட்டன. இதையடுத்து மற்றொரு அதிதிறன் வாய்ந்த ஆகர் இயந்திரம் இந்தோரில் இருந்து மீட்புப்பணிகளுக்காக கொண்டுவரப்பட்டது. அன்றைய நாள் மாலையில், சுரங்கத்திற்குள் பெரிய விரிசல் சப்தம் கேட்டதாக சுரங்க நிறுவனம் தெரிவித்தது.
மேலும் இடிய வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டதால் மீட்பு முயற்சிகள் அப்படியே நிறுத்தப்பட்டன.
நவம்பர் 18: டீசலில் இயங்கக்கூடிய 1,750 குதிரைத்திறன் கொண்ட அமெரிக்கன் ஆகர் இயந்திரத்தால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக துளையிடும் பணிகள் மீண்டும் தொடங்கவில்லை. வேறு வாய்ப்புகள் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் இணைந்து ஐந்து வியூகங்களை வகுத்தனர்.
நவம்பர் 19: கிடைமட்டமாக பெரிய ஆகர் இயந்திரம் வைத்து துளையிடுவது சிறந்ததாக இருக்கும் என மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி கூறியதையடுத்து, செங்குத்தாக துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டன.
நவம்பர் 20: சுரங்க இடிபாடுகளுக்கு மத்தியில் ஆறு அங்குல குழாயை மீட்புக்குழுவினர் வெற்றிகரமாக செலுத்தினர். இதன் மூலம் அதிக அளவிலான உணவுப்பொருட்களை உள்ளே செலுத்த முடிந்தது.
நவம்பர் 21: சில்க்யாரா சுரங்கத்திற்குள் சிக்கியத் தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியானது. அதேநேரம் சுரங்கப்பாதையின் மற்றொரு முனையான பார்கோட்டில் 2 வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதன் மூலம் மற்றொரு முனையில் இருந்து துளையிடும் பணிகள் மாற்று முயற்சியாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதற்கு 40 நாட்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து கிடைமட்டமாக துளையிடும் பணிகள் சில்க்யாரா முனையில் இருந்து ஆகர் இயந்திரம் கொண்டு தொடங்கப்பட்டது.
நவம்பர் 22: 80 சென்டிமீட்டர் அளவுக்கு எஃகு குழாய்களை பொருத்த கிடைமட்டமாக துளையிடும் பணிகள் தொடர்ந்தன. 45 மீட்டர்கள் அளவுக்கு குழாய்கள் பொருத்தப்பட்டநிலையில் இன்னும் 12 மீட்டர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஆனால் அந்த சமயத்தில் கான்கீரிட் இரும்புக்கம்பிகள் எதிர்பட்டதால் ட்ரில்லிங் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
நவம்பர் 23: துளையிடுவதில் தடங்கலை ஏற்படுத்திய இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டன. இதையடுத்து மீட்புப்பணிகள் மீண்டும் தொடங்கின.
நவம்பர் 24: பல்வேறு தடைகளை கடந்து சுரங்கத்திற்குள் மீண்டும் துளையிடும் பணிகள் நடைபெற்றன. மணிக்கு 4 முதல் 5 மீட்டர்கள் வரை ஆகர் இயந்திரம் துளையிட்டது. குழாய்கள் பதிக்கப்பட்ட பின் தொழிலாளர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒத்திகை பார்த்தனர். 15 மணி நேரத்தில் நல்ல செய்தி வரும் என்று பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே தெரிவித்தார்.
நவம்பர் 25: சுரங்கத்தின் கட்டுமானம் இடிந்து விழுந்ததால் மீட்புப்பணிகளில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது. கட்டுமானம் இடிந்ததில் அமெரிக்கன் ஆகர் இயந்திரம் சேதமடைந்ததால் இனி அதனை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த 36 மணிநேரத்திற்கு மீட்புப்பணிகளை தொடர வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டது.
நவம்பர் 26: பிளான் பி திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிய மீட்புக்குழுவினர், சுரங்கத்தின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிடும் பணிகளை மேற்கொண்டனர்.
நவம்பர் 27: பிளான் பி திட்டத்தை கைவிட்டுமீண்டும் பிளான் ஏ திட்டம் தொடரப்பட்டது. இரும்புக்குழாய்க்குள், தொழிலாளர்களை அனுப்பி துளையிடும் பணிகள் தொடங்கின. ரேட் ஹோல் மைனிங் எனப்படும் எலி வளை போன்று துளையிடும் பணிகளை இதற்குரிய நிபுணத்துவம் கொண்ட தொழிலாளர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் 35 பேர் கொண்ட மெட்ராஸ் சேப்பர்ஸ் பொறியாளர் குழு ஆலோசனை செய்தது.
மேற்குவங்க மாநிலத்தை சோந்த 5 பேர் கொண்ட பொறியாளர் குழுவும் ஆலோசனை செய்தது. இதையடுத்து எலி வளை தோண்டும்பாணியில் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் தோண்டும் பணிகளைச் செய்தனர். இந்த முறையே வெற்றிக்கு வித்திட்டுள்ளது.
நவம்பர் 28: எலிவளை முறையில் தொடர்ந்து சுரங்கத்திற்குள் தோண்டும் பணிகள் நடந்தன. இடையில் எந்த கம்பிகளும், தடைகளும் இல்லாததால் இந்த முறை நல்ல பலனைக் கொடுத்துள்ளது. சுரங்கத்திற்குள் தோண்டியபின் குழாய் பதிக்கப்பட்டநிலையில், இறுதி குழாயும் பதிக்கப்பட்டு தொழிலாளர்களை வெளியே கொண்டுவரும் பணிகள் தொடங்கின.