இந்தியா

அந்த 17-வது சுற்று... - மம்தாவின் நந்திகிராம் தொகுதியில் நடந்தது என்ன?

அந்த 17-வது சுற்று... - மம்தாவின் நந்திகிராம் தொகுதியில் நடந்தது என்ன?

நிவேதா ஜெகராஜா

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆனால் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதலில் வெற்றி என அறிவிக்கப்பட்டு பின்னர் தோல்வி என அறிவிக்கப்பட்டார். இதனால், நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்து இருக்கிறார் மம்தா.

நந்திகிராமில் என்ன நடந்தது?

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து 'தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் என்னை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிடட்டும்' என சுவேந்து அதிகாரி சவால் விடுத்தார். இதனால் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விடுத்து நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார் மம்தா. இந்த நிலையில், நந்திகிராமில் வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இங்கு 88 சதவீத வாக்குப்பதிவு பதிவானது. இது 2016-ஐ விட 1 சதவீதம் அதிகம். இதனால் அப்போதே யார் வெற்றிபெற போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் மம்தா பானர்ஜி மட்டும் ஆரம்பம் முதலே சுவேந்து அதிகாரியை விட பின்தங்கி இருந்தார். 13-வது சுற்று வரை இந்த போக்கு தொடர்ந்தது. பின்னர், திடீரென்று, 14-வது சுற்றில் மம்தா பானர்ஜி முன்னிலை வகிக்க தொடங்கினார். 15-வது சுற்று வரை முன்னிலை வகித்த மம்தா, 16-வது சுற்றில் மீண்டும் பின்தங்க ஆரம்பித்தார். 17-வது சுற்றுதான் இறுதி சுற்று. இதில் அதிகப்படியான வாக்குகள் மம்தாவுக்கு ஆதரவாக விழுந்ததாக கூறப்பட, கடைசி கட்டத்தில் தன்னை விட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த சுவேந்து அதிகாரியை மம்தா ஒருவழியாக தோற்கடித்தார் என தகவல்கள் வெளியானது.

1,200 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வீழ்த்தினார் எனக் கூறப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக சுவேந்து அதிகாரி அங்கேயே புகார் சொல்ல, கடைசி சுற்று மட்டும் மீண்டும் எண்ணப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றும், மம்தா பின்தங்கியிருக்கிறார் என்றும் அப்போதே கூறப்பட்டது. அதன்படி, மீண்டும் எண்ணப்பட்ட இறுதி சுற்றில் சுவேந்து அதிகாரியை விட சுமார் 2000 வாக்குகள் மம்தா பின்தங்கி இருக்கிறார் எனக் கூறப்பட்டு, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்த திரிணாமூல் கட்சியினர் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பேசிய மம்தா, ``நந்திகிராம் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. மக்கள் கொடுக்கும் முடிவை ஏற்று, நந்திகிராமில் தோல்வியை ஒப்பு கொள்கிறேன். ஒரு பெரிய போராட்டத்திற்கு செல்லும்போது, நீங்கள் ஏதாவது தியாகம் செய்ய வேண்டும். நந்திகிராமில் வாக்கு எண்ணிக்கையில் சில விஷயங்களை நான் சந்தேகிக்கிறேன். ஆரம்பத்தில், வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. திடீரென்று அது மாற்றப்பட்டது. முடிவு அறிவிக்கப்பட்டு பிறகு அங்கு சில முறைகேடுகள் நடந்ததாக எனக்கு தகவல் கிடைத்துள்ளன. தேவைப்பட்டால், கள யதார்த்தத்தை அறிய நான் நீதிமன்றத்திற்கு செல்வேன். எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்திற்குச் செல்வேன்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மேற்கு வங்கத்தில் எனது ஆட்சியை பாஜகவால் தடுக்க முடியவில்லை. நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த பாஜக ஏன் பயப்படுகிறது?" என கேள்வி எழுப்பினார்.