இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்தது இரண்டு பிரதமர்கள் மட்டுமே.
- 1979ஆம் வருடத்தில் மொரார்ஜி தேசாய்
- 1996 மற்றும் 1999ஆம் வருடங்களில் அடல் பிஹாரி வாஜ்பாய்
ஆகியோருக்குத்தான் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் இல்லை என்பதால் இருவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பிறகு பதவியை ராஜினாமா செய்தனர்.
என்டிஏ கூட்டணியின் முதல் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய், 1996 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார். பதவியேற்ற பதிமூன்றே நாட்களில் அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தார். விவாதத்தின் மீது சுமார் ஒரு மணி நேரம் வாஜ்பாய் உரையாற்றினார்.
அந்த உரையின்போது, அரசியலில் இருந்து விலக நினைப்பதாகவும் வாஜ்பாய் குறிப்பிட்டார். ஆனால், 1998 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, 13 மாதங்களில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாஜ்பாய் எதிர்கொண்டார். கூட்டணியில் இருந்த அதிமுக தனது ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் நடந்த அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.
2018ஆம் வருடத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அப்போதைய தீர்மானத்தின் மீது, 12 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தை மோடி அரசு முறியடித்தது.
நரேந்திர மோடி, 2018-ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசும்போது, "காங்கிரஸின் ஆணவம்தான் இந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரப்படுவதற்குக் காரணம். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் கைகளில் எனது விதி உள்ளது. காங்கிரஸ் தலைவர் 2024ம் ஆண்டு இன்னொரு முறை நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்றும் கூறியிருந்தார். மோடியின் இந்த பேச்சு குறித்த காணொளி எதிர்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நாளில் அதிகளவில் பகிரப்பட்டது.
அப்போது, ராகுல்காந்தி அவையில் கண் சிமிட்டியதும், பிரதமர் மோடியை அவரது இடத்திற்கே சென்று ராகுல்காந்தி அணைத்ததும் பாஜகவினரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசு மீது இரண்டாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது