இந்தியா

கொரோனாவை தடுக்க பத்தனம்திட்டாவில் எடுக்கப்பட்ட சிறப்பு நோய் தடுப்பு யுக்திகள்..!

கொரோனாவை தடுக்க பத்தனம்திட்டாவில் எடுக்கப்பட்ட சிறப்பு நோய் தடுப்பு யுக்திகள்..!

webteam

(கோப்பு புகைப்படம்)

கொரோனாவுக்கு எதிராக நாடே யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், பத்தனம்திட்டாவில் எடுக்கப்பட்ட நோய் தடுப்பு யுக்திகள் அதிகம் பேசப்படுபவற்றில் ஒன்றாக மாறியிருக்கிறது.

தொழில்நுட்பத்தின் அடையாளமாக கேரளாவின் பத்தனம்திட்டா விளங்குகிறது. மார்ச் மாத தொடக்கத்தில், இந்த மாவட்டம் அதன் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை பதிவு செய்தது. இத்தாலி சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. பின்னர், அவர்களுடன் நெருக்கத்தில் இருந்த உறவினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

எல்லைகள் சீல் வைப்பு, தொடர்பு தடமறிதல் போன்ற நடவடிக்கைகள் இங்கேயும் நடந்தன. ஆனால் தொடர்புகள் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டு, பிரத்யேகமாக டேட்டாபேஸ் ஒன்றும் உருவாக்கப்பட்டது. கூடுதலாக, கொரோனா வைரஸ் நோயாளிகள் பயணம் செய்த வழியைக் காட்டும்விதமாக கிராபிக்ஸ் உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 29 முதல் மார்ச் 6 வரை, இந்த குடும்பம் பயணம் செய்த அனைத்து இடங்களும், செய்திருக்கக்கூடிய தொடர்புகளும் இதில் அடங்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்டவரே முன்வந்து சோதனை செய்ய தொடங்கினர். 

செங்கனூர் பொறியியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கொரோனா ஆர்.எம். என்ற செயலியும் பயன்படுத்தப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்கள் இந்த செயலியின் மூலமாக கண்காணிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தலை அவர்கள் மீறினால், அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த செயலி இருந்தது. இப்படி செய்ததன் மூலம், கேரளாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் குறையத் தொடங்கியது. உதாரணமாக கடந்த பத்து நாட்களாகவே அங்கு ஒற்றை இலக்கில்தான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை கேரளாவில் மொத்தமாக 388 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.