கடந்த சில நாட்களாக ‘லோக்பால்’ என்ற சொல் செய்திகளில் வந்துகொண்டிருக்கிறது. அத்துடன் அது விவாத பொருளாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் லோக்பால் அமைப்பு என்றால் என்ன? அதன் முழு அதிகாரங்கள் என்ன? மற்றும் லோக்பால் அமைப்பில் புகார்கள் எவ்வாறு விசாரிக்கப்படும்?
லோக்பால் அமைப்பு என்றால் என்ன?
ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்க உருவாக்கப்பட்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பு 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுகொண்டார். அவருடன் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
லோக்பால் அமைப்பு யார்மீதுள்ள புகார்களை விசாரிக்கலாம்?
லோக்பால் அமைப்பு கீழ்கண்டவர்கள் மேல் உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கலாம். அவை
புகார்கள் எவ்வாறு அளிக்கலாம்?
லோக்பால் அமைப்பில் ஊழல் புகார்களை யார் வேண்டுமானலும் அளிக்கலாம். இந்தப் புகார்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுடன் அளிக்கவேண்டும்.
புகார்கள் விசாரிக்கப்படும் முறை?
லோக்பால் அமைப்பில் புகார்கள் அளிக்கப்பட்டவுடன் அந்த அமைப்பு புகாரில் தொடர்புடைய நபரிடம் விளக்கம் கேட்கும். அத்துடன் இந்தப் புகாரில் முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடும். மேலும் இந்தப் புகார்கள் அரசு அதிகாரிகள் மீது இருந்தால் அவை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
முதற்கட்ட விசாரணை:
புகார்களின் முகாந்திரம் குறித்து ஆராய்ந்த பிறகு லோக்பால் அமைப்பு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடும். இதனை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். முதற்கட்ட விசாரணை நடத்தும் அமைப்பு சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரின் உயர் அதிகாரியிடமும் புகார் குறித்து கேட்கவேண்டும். உதராணமாக புகாருக்குள்ளான நபர் பிரதமராக இருந்தால் மக்களவையிடம் கேட்கவேண்டும். அதுவே அவர் அமைச்சராக இருந்தால் பிரதமரிடம் கேட்கவேண்டும். மற்ற துறை அரசு அதிகாரிகளாக இருந்தால் அந்தந்த துறையின் அமைச்சர்களிடம் கேட்கவேண்டும். இவற்றை எல்லாம் முடித்து பின்பு அறிக்கையை லோக்பால் அமைப்பிற்கு தாக்கல் செய்யவேண்டும்.
இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் லோக்பால் உறுப்பினர்களில் மூன்று பேர் கொண்ட அமர்வு இதனை ஆராய வேண்டும். அத்துடன் புகாருக்குள்ளான நபரின் கருத்தையும் கேட்டப் பின்னர் முழு விசாரணைக்கு இந்த அமர்வு உத்தரவிடும். இந்த நடைமுறைகள் அனைத்தையும் புகார் அளித்த 90 நாட்களுக்குள் முடிக்கவேண்டும்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்?
லோக்பால் அமைப்பு முழு விசாரணைக்கு உத்தரவிட்ட பின்பு, லோக்பால் அமைப்பில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும். இந்தக் குற்றப்பத்திரிகையை மூன்று பேர் கொண்ட லோக்பால் அமர்வு ஆராய்ந்து அதனை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்ய உத்தரவிடலாம். அல்லது அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் இந்த அமர்வு உத்தரவிடலாம்.
பிரதமர் மீது புகார் வந்தால்?
பிரதமர் மீது வெளிநாட்டு உறவு, உள்நாட்டு பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகள் தொடர்பாக ஊழல் புகார் வந்தால் லோக்பால் அமைப்பின் மொத்த உறுப்பினர்களும் விசாரணைக்கு உத்தரவிட அனுமதிக்கவேண்டும். அத்துடன் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். அப்போது தான் பிரதமர் மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியும். இந்த விசாரணை வீடியோவாகவும் பதிவு செய்யப்படவேண்டும். இந்தப் புகாரில் உண்மையில்லை என்று தெரிய வந்தால் இந்த வீடியோ பதிவை வெளிவராமல் லோக்பால் அமைப்பு பார்த்துக்கொள்ளவேண்டும்.