இந்தியா

கொரோனா மூன்றாம் கட்டம் என்றால் என்ன ? ஆபத்துகள் என்னென்ன?

webteam

கொரோனா... கொரோனா ... இன்று திரும்பும் இடமெல்லாம் இந்த பெயர்தான் ஓங்காரமாக ஒலித்து கொண்டிருக்கிறது. காரணம்.. சமீப காலங்களில் மனித குலம் இப்படியொரு பாதிப்பை கண்டதில்லை என்பதுதான். தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 96 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 10, 15 என்று சென்றுகொண்டிருந்த இந்த எண்ணிக்கை இன்று 50, 100 ஆக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தொற்று இராண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும், மூன்றாம் கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் இராண்டாம் கட்டத்திலேயே பாதிப்பாவர்களின் எண்ணிக்கை 800 தாண்டி சென்றிருக்கிறது. பலி 7 ஐ கடந்துள்ளது. இந்நிலையில், இந்த தொற்று மூன்றாம் கட்டத்திற்கு சென்றால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும், அதை அரசு எவ்வாறு கையாளும், ஊரடங்கு நீட்டக்கப்படுமா போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இந்த ஒட்டு மொத்த சந்தேகங்களையும், நாம் மருத்துவரும், அரசியல் விமர்சகருமான சுமந்த் சி ராமனிடம் முன்வைத்தோம். அவர் முதலில் கொரோனா தொற்றின் கட்டங்களை தெளிவு படுத்தினார்.

“முதல் கட்டம் என்பது வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று உள்ளவர்கள் இந்தியாவிற்கு வருவது, அவர்களுக்கு நாம் சிகிச்சை அளித்து வருகிறோம். இராண்டாம் கட்டம் என்பது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து, அவர்களை தொடர்பு கொண்டவர்களுக்கு கொரோனா பரவுவது. மூன்றாம் கட்டம் என்பது கொரோனா வைரஸ் தொற்றானது காற்றில் பரவ ஆரம்பித்து, மக்களிடம் பரவி சமூக தொற்றாக மாறுவது. இந்தக்கட்டத்தில் தொற்றானது மிக வேகமாக பரவும். ஆனால் உண்மையில் நாம் அந்தக்கட்டத்தில்தான் இருக்கிறோம். எனவே நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.


மூன்றாம் கட்டத்தில் எந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்கும்?

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் இருக்கிறது. ஆனால் மூன்றாம் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு சேர்த்து இறப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கான பாதிப்பை தமிழகம் தாங்குமா என்பது இன்னொரு சிக்கலான விஷயம். காரணம் அதற்கு நம்மிடம் தேவையான போதுமான வசதிகள் இல்லை.


அப்படியானால் இந்த ஆபத்தில் இருந்து மக்கள் எப்படி தங்களை காத்துக்கொள்ள வேண்டும்?

சமூக விலகல் தான் ஒரே வழி. இந்தியாவில் கொரோனா தாக்கம் பெரிதளவில் இல்லாததற்கு ஒரே காரணம் ஊரடங்கு மட்டுமே. இந்த ஊரடங்கு மட்டும் இல்லை என்றால் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை சந்தித்து இருக்கும். மேலும் அரசு அறிவுறுத்தியுள்ள, கைகளை கழுவுதல், சமூக விலகல், முக்கியமாக முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதில் மக்கள் தீவிரம் காட்ட வேண்டும்.


இந்தக் கட்டத்தில் அரசு எவ்வாறு செயல்படும் செயல்பட வேண்டும் ?

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரிசோதனைகள் மிக குறைவாக எடுக்கப்பட்டிருக்கின்றன. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 25,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு விஷயத்தை பொறுத்தவரை அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஒன்றுதான் நம்மை பேராபத்தில் இருந்து காக்கும்.

மேலும் அரசானது ஊரடங்கு தளர்வை முறையான திட்டமிடலோடு தளர்த்த வேண்டும். கல்வி நிலையங்கள் பொறுத்தவரை ஜூன் மாதம் வரை பிரச்னையில்லை. ஆனால் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் திட்டத்தை வகுக்க வேண்டும். என்றார்.