கூட்டணியை அமைக்கும் கட்சி, அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கடிதங்கள் பெற வேண்டும். இதையடுத்து இந்த ஆதரவு கடிதங்கள் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக, பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பின்னர், இந்த தீர்மானத்தின் நகலும் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதேபோல் கூட்டணியில் இல்லாத கட்சிகள், வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் சூழல் ஏற்பட்டால், அதற்கான கடிதங்களும் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சியின் தலைவரை பதவியேற்க அழைப்பார். கூட்டணியின் பிரதமர் பதவியேற்ற பிறகு, கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பிறகு, கூட்டணி அரசு செயல்பட தொடங்கும் என்பது நடைமுறை. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திய நிலையில், இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசும் அமைந்த போது இத்தகைய மரபுகள் பின்பற்றப்பட்டன.
தற்போது மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மீண்டும் கூட்டணி நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.