மஹுவா மொய்த்ரா எக்ஸ் தளம்
இந்தியா

”பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது” - மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய மஹுவா மொய்த்ரா!

Prakash J

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. முன்னதாக உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசைக் கடுமையாகச் சாடினார். பின்னர் உரையாற்றிய மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹூவா மொய்த்ராவும் கடுமையாகப் பேசினார்.

அவர், “மக்களவையில் கடந்த முறை, இதே இடத்தில் நான் நின்றபோது எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு எம்பியின் குரல்வளையை நெரித்ததால் ஆளும் பாஜக, பெரும் விலை கொடுத்துவிட்டது. என்னை ஒடுக்க நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் மக்கள், உங்களது 63 நாடாளுமன்ற மக்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்.

தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பாஜகவினர் இது மைனாரிட்டி அரசு என்பதை உணரவே இல்லை. எங்களை (எதிர்க்கட்சிகளை) உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

இதையும் படிக்க: ’இன்னும் ஒரு வேலை இருக்கிறது..’ ஓய்வுபெற்ற விராட் கோலியிடம் இறுதியாக அறிவுரை கூறிய ராகுல் டிராவிட்!

செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் செங்கோல் என்பது எதற்காக? கடவுளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவர் என்பதை பாஜகவினர் உணர்ந்துகொள்ள வேண்டும். மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள்” எனக் கடுமையாகப் பேசினார்.

கடந்த முறை, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். அதன் முடிவில் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அப்போது கர்ஜித்த அவர், ”மீண்டும் பெரிய அளவில் வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைவேன்” எனச் சபதமிட்டார். அவர் சொன்னதுபோலவே இந்த முறையும் வெற்றிபெற்று மீண்டும் எம்பியாக நுழைந்துள்ளார்.

இதையும் படிக்க: சாம்பியனான இந்தியா... மகிழ்ச்சியில் வீடியோகால் செய்த ஹர்திக்! வதந்திகளுக்கு முற்றிப்புள்ளியா?