கடந்த 27-ம் தேதி அதிகாலை கேரள மாநிலம் திருச்சூர் ATMகளில் சொகுசு காரில் சென்று கொள்ளை அடித்துவிட்டு, சுமார் 67 லட்சம் பணத்துடன் கண்டெய்னர் லாரியில் வடமாநில கொள்ளையர்கள் 7 பேர் தப்பினர். அவர்கள் மேற்கு நோக்கி சென்றதால், தமிழ்நாடு வழியாக அவர்கள் தப்பிக்க திட்டமிடுவதை கணித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணாவுக்கு திருச்சூர் காவல் கண்காணிப்பாளர் இளங்கோ தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து குமாரபாளையம் பகுதியில் திருச்செங்கோடு DSP இமயவர்மன், காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் செப் 27 அதிகாலை முதலே வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் காலை 8.30 மணி அளிவில் சேலம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றுள்ளது.
இதனால் சந்தேகப்பட்டு, அதை துரத்திப்பிடிக்கச் சென்றுள்ளனர் காவல்துறையினர். அப்போது எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விட்டு வேகமாக சென்ற லாரி ஓட்டுநர், ‘சங்ககிரி சுங்க சாவடிக்குள் சென்றால் காவல் துறையிடம் சிக்கி கொள்வோம்’ என எண்ணி மீண்டும் யூடர்ன் எடுத்து சங்ககிரி நகருக்குள் லாரியை இயக்கியுள்ளார். அங்கிருந்து வெப்படை பள்ளிபாளையம் சாலைக்கு லாரியை இயக்கியுள்ளார். தொடர்ந்து சினிமா பாணியில் கொள்ளை கும்பலை 30 கி.மீ தூரம் துரத்திய காவல்துறை, சன்னியாசிப்பட்டி அருகே பொது மக்கள் உதவியுடன் சுற்றி வளைத்தது.
லாரியை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் லாரியில் இருந்தவர்களை கீழே இறக்கி கண்டெய்னரை திறந்து சோதனை செய்தபோது, அதில் ஹூண்டாய் க்ரிட்டா (Hyundai CRETA) கொள்ளையடிக்கப்பட்ட பணப்பையும் இருந்துள்ளன. அதை காவலர்கள் கைப்பற்ற முயன்றபோது பணப்பையை எடுத்துக் கொண்டு லாரி டிரைவர் ஜீமாந்தின் காவல்துறை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளார். இதனை அடுத்து போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். அவர் தொடர்ந்து தப்பிக்க முயன்றதால், காவலர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளனர். அதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே அவருடன் கண்டெய்னரில் இருந்த அஷார் அலியும் தப்பி ஓடி உள்ளார். அவரையும் போலீசார் சுட்டுள்ளனர். இதில் அவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை எடுத்து இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியில் லாரி டிரைவர் ஜீமா உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த அசார் அலிக்கு ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசார் அலியின் கால் அழுகிவிட்டதால் அது அகற்றப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிடிபட்ட கண்டெய்னர் லாரியில் இருந்த இர்பான் (32), சவுக்கீன் கான் (23) முகமது இக்ரம் (42), சபீர் (26), முபராக (18). ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்களை கிடைத்துள்ளன.
அதன்படி இந்த கொள்ளை கும்பல் ஹரியானா, ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஓர் இடத்தில் ஒன்று கூடி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்றும் தெரியவந்தது.
இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். மேலும் 3 பேர் ஹீண்டாய் கிரிட்டா சொகுசு கார் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். அத்தோடு கண்டெய்னர் லாரியில் இருவர் பெங்களூர் வந்து அங்கிருந்து காஞ்சிபுரம் வந்து 7 பேரும் சென்னையில் ஒன்றிணைந்து திருச்சூர் சென்றுள்ளனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரில் ஒருவர் தவிர மற்ற அனைவர் மீதும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுடன் வழக்கு உள்ளதாகவும், அத்தோடு அதில் ஒருவர் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்திலேவும் வழக்கு உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏடிஎம் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து இதில் தொடர்புடைய பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகியவற்றின் காவல்துறையினர் வெப்படை வந்து நேரடியாக விசாரணை செய்தனர்.
இந்நிலையில் தற்போது மேற்கு வங்க காவல் துறையினரும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு கொள்ளை கும்பல் குறித்த விவரங்களை கேட்டுள்ளதாகவும், அவர்களும் விரைவில் நாமக்கல் வந்து கொள்ளை கும்பல் குறித்து விசாரிக்க உள்ளதாக எஸ்.பி ராஜேஷ் கண்ணா தெரிவித்தார்.
இந்த நிலையில் கேரளா, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காவல் துறையினர் இந்த கொள்ளை கும்பலை கைது செய்வதற்கான உத்தரவை சேலம் சிறையில் வழங்கி, அதன் பின்னர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்கள் மாநிலங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திற்கு முகமது இக்ரம் (42) தலைமேற்று கொள்ளையை அரகேற்றியதாக கூறப்படுகிறது. இவர் மீது மேற்கு வங்கத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது தங்களுக்கு தற்போது தெரியவந்திருப்பதாக மேற்கு வங்க காவல் துறை தகவல் அளித்துள்ளதாக நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணா தெரிவித்தார். இதற்கிடையே கொள்ளை கும்பலை நாமக்கல் மாவட்ட காவல்துறையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் எஸ்.பி தெரிவித்தார். இதையடுத்து இவ்விஷயம், பல மாநில காவல்துறையையும் அலர்ட் செய்துள்ளது.