model images twitter
இந்தியா

அக்பர், சீதா பெயர் சர்ச்சை.. சிங்கங்களுக்கு மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்த புதிய பெயர்கள் இதுதான்!

திரிபுராவில் இருந்து மேற்கு வங்காளத்தில் கொண்டு வரப்பட்ட சிங்கங்களுக்கு, புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் (CZA) மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

Prakash J

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா என்ற உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ’அக்பர்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. மற்றொரு 6 வயதான பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் விசாரணையின்போது, ’சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற மேற்குவங்க அரசு மற்றும் பூங்கா நிர்காகத்திற்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றம், ‘விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்பட உள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மதப் போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம்’ என அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், அந்த இரண்டு சிங்கங்களுக்கும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் (CZA) மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில், ‘அக்பர்’ என்ற ஆண் சிங்கத்திற்கு, 'சூரஜ்' என்ற பெயரும், ’சீதா’ பெண் என்ற சிங்கத்திற்கு, 'தனயா' என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்காள அரசு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிக்க: 2024 சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற பாலஸ்தீனர்; நெஞ்சை உருக்கும் Photo-ன் பின்னணி!