இந்தியா

மக்களை பிளவுபடுத்தும் முயற்சியை முறியடிப்போம்: மம்தா பானர்ஜி

மக்களை பிளவுபடுத்தும் முயற்சியை முறியடிப்போம்: மம்தா பானர்ஜி

rajakannan

மொகரம், துர்கா பூஜை பண்டிகைகளின் போது, மக்களை பிளவுபடுத்தும் முயற்சியை மேற்குவங்க அரசு முறியடிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு முஸ்லீம்களின் பண்டிகையான மொகரமும், இந்துக்களின் பண்டிகையுமான துர்கா பூஜாவும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே நாளில் வர இருக்கிறது. இதன் காரணமாக, மதம் சார்ந்த மோதல்கள் தலை தூக்கும் என்ற காரணத்திற்காக, துர்கா சிலைகளை கரைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். 

ஆனால், மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ம் தேதி மொகாரம் அன்று துர்கா சிலைகளை கரைக்க தடையில்லை என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், மொகரம் ஊர்வலம் மற்றும் துர்கா பூஜை நிகழ்ச்சி ஊர்வலமும் தனித்தனியான பாதைகளில் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது.

இதனிடையே, துர்கா பூஜை நிகழ்ச்சி ஒன்றினை நேற்று தொடங்கி வைத்த மம்தா பானர்ஜி, 'மேற்குவங்கம், மோதல்களுக்கான இடம் அல்ல. மேற்குவங்கத்தில் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தங்களது பண்டிகைகளை கொண்டுள்ளனர். மக்கள் யாருடைய சதிக்கும் பலியாகிவிடக்கூடாது. தவறான தகவல்களுடன் பரவும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் செய்திகள் மீது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றார்.