ஒரு ஏழைக்குடும்பத்தில், மூன்று வேலை உணவில்லா நிலையில், கடின முயற்சியால் படித்து ஐஏஎஸ் அதிகாரியான அன்சாரின் கதை இது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பர்பானி நகரத்தில் ஆட்டோ ஓட்டுநரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் அன்சார் ஷாயிக். இவரது தந்தைக்கு மொத்தம் மூன்று மனைவிகள். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், பிள்ளைகளின் படிப்பில் கவனமின்றி இருந்துள்ளார். குடும்பத்தில் வறுமை ஆட்டம் போட, சோற்றுக்கே திண்டாட்டம் என்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அன்சார் அப்போது 4வது படித்துக்கொண்டிருந்தார். அவரது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பினால் பணம் கிடைக்கும் என, அன்சார் தந்தையிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். அவரும் அன்சாரின் ஆசிரியருக்கு போன் செய்து, அவர் இனி பள்ளிக்கு வரமாட்டார் என கூறியுள்ளார்.
இதைக்கேட்ட அன்சாரின் வகுப்பு ஆசிரியர், ‘அவன் நல்லா படிக்குற பையன். அவன் படிப்ப கெடுத்துடாதீங்க. எனக்காக பள்ளிக்கு அனுப்புங்க’ எனக் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையால் அன்று பிழைத்தது அன்சாரின் படிப்பு. ஆசிரியரின் ஊக்கத்தால் படிக்கத்தொடங்கிய அன்சார், வறுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் 12ஆம் வகுப்பில் 91% மதிப்பெண் பெற்று சாதித்தார். பின்னர் அரசியல் அறிவியல் இளங்கலை படிப்பை தொடர்ந்துள்ளார். அவரது சகோதரரும், தந்தையும் தாங்கள் குறைந்த அளவு வருமானம் ஈட்டினாலும், அதை அன்சாரின் படிப்பிற்காக முழுமையாக அனுப்பியுள்ளனர். இதனால் வறுமையின் கொடுமையை நேருக்குநேர் சந்தித்துள்ளது அன்சாரின் குடும்பம். ஒருகட்டத்தில் அன்சாரின் தங்கையுடைய கணவர் குடித்துக்குடித்தே இறந்துவிட்டார். இதனால் அவரது தங்கை மாமியார் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு திரும்பினார். அவருக்கும் சேர்த்து வருமானம் ஈட்டும் நிலைக்கு அன்சார் குடும்பம் தள்ளப்பட்டது. அன்சார் தனது படிப்பை நிறுத்திவிடலாம் என நினைக்க, அவரது தங்கை அளித்த ஊக்கத்தால் அவர் மீண்டும் படிப்பை தொடர்ந்துள்ளார்.
அப்போது அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அன்சாரின் தந்தை விண்ணப்பித்துள்ளார். அந்தச் சமயம் அன்சார் வீட்டின் தகவல்களை சேகரிக்க வந்த அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் அன்சார் மனதில் ஆழமான தாக்கத்தையும், அரசு அதிகாரியாக வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்துள்ளது. அரசு அதிகாரியாக மாறி தனது குடும்பத்தை போன்ற ஏழைக்குடும்பங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவர் நினைத்துள்ளார். அதற்காக கல்லூரியில் படிக்கும் போதே பயிற்சி யுபிஎஸ்சி மையம் ஒன்றில் சேர முயற்சித்துள்ளார். அங்கு பல ஆயிரக்கணக்கான பணத்தை அந்தப் பயிற்சி மையம் கேட்க, தனது நிலையைக்கூறி அன்சார் விளக்கியுள்ளார். அன்சார் கதையைக்கேட்ட பயிற்சி மைய உரிமையாளர் பாதிக்கட்டணத்தை பெற்றும் தனது பயிற்சி மையத்தில் இடமளித்துள்ளார்.
இது தொடர்பாக கூறும் அன்சார், “வாழ்க்கையில் வறுமைகளை அதிகம் கண்டுள்ளேன். பள்ளியில் ஒருமுறை புழு விழுந்த உணவைக்கூட உண்டுள்ளேன். பல நேரங்களில் ஒருவேளை உணவு மட்டும்தான். பயிற்சி மையத்தில் இருந்தவர்களில் நானே இளையவன். நான் பல சந்தேகங்களை கேட்பேன். நான் கேள்வி கேட்கும் போது மற்றவர்கள் சிரிப்பார்கள்” என்றார். ஒருவழியாக யுபிஎஸ்சி தேர்வையும் எழுதி முடித்துவிட்டார். அவரது கடின உழைப்பாலும், கவனமான படிப்பாலும் தேர்வில் வெற்றி பெற்று, அவர் ஐஏஎஸ் அதிகாரியாகவும் ஆகிவிட்டார். அவரை பார்த்து சிரித்தவர்கள் தற்போது வாயடைத்து போய்விட்டனர். ‘வணக்கம் சார்’ என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அன்சார் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இதை போன்ற இளைஞர்களால்தான் இந்தியா இன்னும் உயிர்ப்போடு உள்ளது.
(Courtesy :YOURSTORY)