மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா மருத்துவர் கொலை: ஆளும்கட்சி பேரணி.. 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் சில தினங்களுக்கு முன்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைதான சஞ்சய் ராய்

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற போராட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இந்தச் சூழலில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட கருத்தரங்கு அறையை மர்ம கும்பல் நாசப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், போலீஸார் இதை மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: நீரஜ் சோப்ராவுடன் திருமணம் என பரவிய வதந்தி... மவுனம் கலைத்த மனு பாக்கர்!

இந்த வழக்கை காவல்துறை தவறாகக் கையாள்வதாகவும், திரிணாமுல் கட்சி ஆதாரங்களை அழிக்க முயல்வதாகவும் எதிர்க்கட்சியினரும் போராட்டக்காரர்களும் குற்றம்சாட்டிய நிலையில், மேற்கு வங்கு முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இன்று மாலை பேரணிக்கு அழைப்பு விடுத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி மாநில முதல்வர் பேரணியை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாணவி கொலை வழக்கு தொடர்பாக 5 மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு சிபிஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இம்மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த பதவிக்கு மாநில அரசின் சுகாதாரத் துறையில் இருந்த சுஹ்ரிதா பால், நியமிக்கப்பட்டார். பதவியேற்ற அவர், “அதிகாரப்பூர்வமான பணிகளைச் செய்வதற்கு எனக்கு ஒரு மணிநேரம் தேவை. நீங்கள் (போராட்டக்காரர்கள்) என்னை நம்ப வேண்டும். உங்களால் என்னை நம்ப முடியவில்லை என்றால் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்திருப்பதும் பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: தாய்லாந்து: அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்வு... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?