மம்தா பானர்ஜி ட்விட்டர்
இந்தியா

“எதிர்க்கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது” - வைரலாகும் மம்தா பானர்ஜியின் பேச்சு!

“ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட, பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கிடைக்காது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Prakash J

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 26) 89 தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கத்தில் 3 மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், “ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட, பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கிடைக்காது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி, “26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டுக்கூடக் கிடைக்காது. நீதிமன்றத்தை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தை அல்ல, உயர்நீதிமன்றத்தை மட்டுமே விலைக்கு வாங்கியுள்ளது. ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும், சிபிஐ, என்ஐஏ, பிஎஸ்எஃப், சிஏபிஃஎப் உள்ளிட்டவற்றையும் பாஜக விலைக்கு வாங்கியுள்ளது” எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: ராஜஸ்தான் | “I-N-D-I-A கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும்” - பாஜக அமைச்சரின் பேச்சு வைரல்

மம்தா கூறியதன் பின்னணி என்ன?

முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு, 24,640 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வினை 23 லட்சம் பேர் எழுதினர். இதில் 24 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்து கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பின்போது, “சட்டவிரோதமாக நடைபெற்ற 2016-ஆம் ஆண்டு ஆசிரியர் பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த 25,753 ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் பெற்ற சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவற்றை 12 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் திரும்பிச் செலுத்த வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது. “ஊழலில் ஈடுபட்ட ஒருசிலருக்காக, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் அப்பாவி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: சட்டீஸ்கர் | பூங்காவில் காதலர்களை விரட்டிவிரட்டி விசாரணை நடத்திய பாஜக எம்.எல்.ஏ... #Viralvideo