இந்தியா

பாஜக விரிக்கும் வலை..? - எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் மம்தாவின் தீவிர விசுவாசி!

பாஜக விரிக்கும் வலை..? - எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் மம்தாவின் தீவிர விசுவாசி!

EllusamyKarthik

மேற்கு வங்க அமைச்சர் பதவியைத் தொடர்ந்து, தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதாக சுவேந்து ஆதிகாரி அறிவித்திருப்பது, மம்தாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.  

திரிணாமுலின் மூத்த - முக்கியத் தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான சுவேந்து ஆதிகாரி சமீபத்தில் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இவர் ஒரு காலத்தில் மம்தாவின் தீவிர விசுவாசி. 

மம்தாவை மேற்கு வங்கத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது 2007-ல் நடந்த நந்திகிராம் கிளர்ச்சி. 2007 நவம்பர் 25 அன்று நந்திகிராமில் தனது கட்சி உறுப்பினர்கள் மீது அப்போதைய ஆளும் சிபிஎம் தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அது கிளர்ச்சியாக வெடித்தது. இதுவே மம்தாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இந்தப் போராட்டங்களில்  மம்தாவுக்கு அனைத்துமாக இருந்தவர் இந்த சுவேந்துதான். இந்த தொகுதியில்தான் தற்போது சுவேந்து எம்எல்ஏவாகவும் இருக்கிறார். 

இப்படி தீவிர விசுவாசியாக இருந்தவர், சில காலங்களுக்கு முன்பில் இருந்து மம்தாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். திரிணாமுல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர், ஹுக்ளி ஆற்று பாலங்கள் வாரியத் தலைவர் என்று மம்தாவால் பதவிகளின் உச்சத்தில் உட்கார வைக்கப்பட்ட இந்த சுவேந்து ஆதிகாரியிடம் இருந்து மாவட்டப் பொறுப்பு பதவியை சமீபத்தில் பறித்தார் மம்தா. 

தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் நுழைந்த பிறகு, அவரின் ஆலோசனைப்படியே இந்தப் பதவி பறிப்பு நடந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சுவேந்து பதவிகளை ராஜினாமா செய்தார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு நிற்காமல் தற்போது தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதாக இன்று அறிவித்துள்ளார் சுவேந்து ஆதிகாரி. 

இதற்கிடையே, இவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. அவர் பாஜகவில் சேரும் தகவலை வெளியிட்டு இருப்பவர் பாஜக எம்.பி. நிசித் பிரமானிக். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் இது தொடர்பாக பேசிய பிரமானிக், ``காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது, விரைவில் சுவேந்து பாஜகவில் இணைகிறார் என்ற நற்செய்தியை நீங்கள் கேட்கலாம். சுவேந்து ஒரு பிரபலமான தலைவர் மற்றும் அவரது தொகுதியின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார். அத்தகைய தலைவர் பாஜகவில் இணைந்தால், கட்சி வளமானதாக இருக்கும். விரைவில் நற்செய்தியைப் பெறப்போகிறோம் என்று நாங்கள் நம்புகிறோம். 

மேலும் பல மூத்தவர்களும், இளைய தலைவர்களும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர், அவர்கள் விரைவில் கட்சியில் சேரக்கூடும். எங்களுடன் தொடர்பு கொண்ட அனைத்து டி.எம்.சி தலைவர்களையும் நாங்கள் எடுத்துக் கொண்டால், 2021 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் டி.எம்.சியின் எண்ணிக்கை (சட்டமன்றத்தில்) குறைந்துவிடும்" என்று கூறினார்.

இதே பிரமானிக் இன்னும் ஒன்றையும் சொன்னார். அதாவது, ``2019 நாடாளுமன்றத் தேர்தலில், வட வங்காள மக்கள் திரிணாமுல் காங்கிரஸைத் தூக்கியெறிந்தனர். தென் வங்காளத்தில் அந்த கட்சிக்கு கொஞ்சம் பிடி இருக்கிறது. ஆனால் சுவேந்து பாஜகவில் சேர்ந்தால், தென் வங்காளத்தையும் திரிணாமுல் இழக்க நேரிடும்" என்றார். அவர் குறிப்பிட்டதுபோல் தென் வங்காள மக்களிடம் பிரபலமானவர் சுவேந்து ஆதிகாரி.  

சுவேந்து பூர்பா மெடினிபூர் மாவட்டத்திலிருந்து வந்தவர் என்றாலும், அவரது அரசியல் செல்வாக்கு முர்ஷிதாபாத், மால்டா, ஜார்கிராம், புருலியா, பாங்குரா மற்றும் பிர்பூம் ஆகிய தென் வங்காள மாவட்டங்களிலும் வெகுவாக இருக்கிறது. 2010 காலகட்டங்களில் திரிணாமுல் கட்சியை இந்த மாவட்டங்களில் சென்ற சேர்த்ததில் முக்கிய பங்கு சுவேந்துவுக்கு உண்டு. இதனால்தான் அவரின் செல்வாக்கை உணர்ந்து தற்போது அவருக்கு பாஜக வலைவீசத் தொடங்கியுள்ளது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலில், வட வங்காளத்தில் ஒரு சீட் கூட திரிணாமுல் கட்சி ஜெயிக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சுவேந்து ஆதிகாரி பாஜகவில் இணையும் பட்சத்தில் தெற்கு வங்காளத்திலும் திரிணாமுல் அடிவாங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்கிறார்கள் மேற்கு வங்க அரசியல் நோக்கர்கள்.