ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு நாங்கள் ஆதரவும் தெரிவிக்கவில்லை வாக்களிக்கவும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
370 பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாநிலங்களவையில் அறிவித்தார். இதையடுத்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் எனத் தெரிவித்தார்.
இதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை எதிப்பு தெரிவிக்கவில்லை எனக்கூறி மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை. நாங்கள் ஆதரித்து வாக்களிக்கவும் இல்லை. காஷ்மீர் மக்களிடமும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அவர்கள் பேசி இருக்க வேண்டும். ஒருவேளை அமைதி தேவை என்றால் 370 சட்ட ரத்து குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிடமும் பேசி இருக்க வேண்டும். ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி குறித்து எந்தத் தகவலும் என்னிடம் இல்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்படக்கூடாது என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. ஜனநாயகத்தின் மீது விருப்பமுள்ளவர்கள் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் நினைக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.