video image x page
இந்தியா

உத்தரப்பிரதேசம்| ’விருந்தில் மீனும் இறைச்சியும் இல்லை’ - திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், திருமண விழாவின்போது மணமகள் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் மீன் மற்றும் இறைச்சி இல்லை என மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் ஷர்மா. இவருடைய மகள் சுஷ்மா. இவருக்கும் அபிஷேக் சர்மாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்களுடைய திருமண ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது மணமகள் வீட்டார் பரிமாறிய உணவில் அசைவம் (மீன் மற்றும் இறைச்சி) இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மணமகன் வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், மணமகன் வீட்டார் பெண் வீட்டாரையும் கட்டையால் தாக்கியுள்ளனர். மணமகளின் கன்னத்திலும் அபிஷேக் ஷர்மா அறைந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் அந்த திருமணத்தையும் மணமகன் நிறுத்தியுள்ளார்.

மணமகனின் இந்தச் செயலால் மணப்பெண்ணின் தந்தை தினேஷ் ஷர்மா, போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்போது மணமகனுக்கு ரூ.5 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் ரூ.4.5 லட்சம் கார் வாங்க கொடுத்திருப்பதாகவும் மீதித் தொகையில் இரண்டு மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. திருமணத்தில் அசைவ உணவு இல்லாததால் அந்த திருமணமே நின்றுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: தொடரும் குற்றச்சாட்டுகள்! சூடுபிடிக்கும் விசாரணை- பதவி பறிபோகுமா?பெண் IAS அதிகாரியின் தந்தை பதில்

இதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில், பெண் வீட்டார் விருந்து பரிமாறினர். அப்போது அந்த உணவில் ஆட்டுக்கிடா எலும்பு இல்லை எனக் கூறி மணமகன் வீட்டார் பிரச்னை செய்தது பேசுபொருளானது. அதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடகா குடகு மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், சாப்பாட்டு இலையில் இனிப்பு வைக்கவில்லை என மணமகன் சண்டை போட்ட விவகாரம் பேசுபொருளானதுடன், அந்த திருமணமும் நின்றுபோனது.

உணவு

முன்னதாக, இதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற திருமணத்தின்போதும் அசைவ உணவு பரிமாறப்படவில்லை என மணமகன் குற்றஞ்சாட்டியதால் அந்த திருமணமும் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இழிவாகப் பேசிய நபர்... எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்த டெல்லி காவல்துறை!