இந்தியா

"கொளுத்துகிறது வெயில்; பிரதமருக்கு மட்டும் மோசமான வானிலையா?" - லோக் தளம் தலைவர் கிண்டல்

"கொளுத்துகிறது வெயில்; பிரதமருக்கு மட்டும் மோசமான வானிலையா?" - லோக் தளம் தலைவர் கிண்டல்

webteam

உத்தரபிரதேசத்தில் வானிலையை காரணம் காட்டி பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதை சமாஜ்வாதியின் கூட்டணி கட்சி தலைவர் கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் வரும் 10-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 52 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தொகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜகவின் முக்கிய தலைவர்கள் அப்பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், அங்குள்ள பிஜ்னோர் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் வானிலையை காரணம் காட்டி பிரதமரின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், சமாஜ்வாதியின் பிரச்சாரக் கூட்டம் பிஜ்னோரில் நடைபெற்றது. இதில் சமாஜ்வாதி கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "பிஜ்னோரில் இன்று வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், பாஜகவோ இங்கு மோசமான வானிலை நிலவுவதாக கூறி பிரச்சாரத்தை ரத்து செய்திருக்கிறது.

பிஜ்னோரில் முழுமையான மின்சாரம் வழங்குவதாக பாஜக கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் பிஜ்னோரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பிரதமர் மோடி இங்கு வந்திருந்தால், அவரிடம் மக்கள் சரமாரியாக கேள்வியெழுப்பி இருப்பார்கள். அதனால்தான் இன்று பாஜகவுக்கு வானிலை மோசமாகிவிட்டது" எனக் கிண்டலாக கூறினார்.