இந்தியா

'போலீஸ் சொல்லட்டும் சபரிமலையில் இருந்து செல்கிறோம்' பெண்கள் அமைப்பு

'போலீஸ் சொல்லட்டும் சபரிமலையில் இருந்து செல்கிறோம்' பெண்கள் அமைப்பு

webteam

கேரள காவல்துறை அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று சொல்லட்டும் சபரிமலையில் இருந்து திரும்பி செல்கிறோம் என சபரிமலைக்கு 30 பெண்களை அழைத்து வந்த மனிதி அமைப்பின் தலைவர் செல்வி கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து சபரிமலை சென்ற 11 பெண்கள் பம்பை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது பம்பை விநாயகர் கோவிலில் பெண்களுக்கு இருமுடி கட்ட அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் தமிழக பெண்கள் மற்றும் பம்பை அர்ச்சகர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 6 பெண்கள் தாங்களே இருமுடி கட்டிக்கொண்டு காலை 5.30 மணிக்கு சபரிமலை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். 11 பெண்களில் 9 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் பம்பையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சென்னையை சேர்ந்த 11 பெண்களும் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்களை எதிர்த்தும், ஐயப்பன் சாமியை வேண்டியும் சரணகோஷமிடும் ஐயப்ப பக்தர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த 11 பெண்களும் சபரிமலை செல்ல ஏற்கெனவே பாதுகாப்பு கோரி, கேரள முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேவஸம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் " தேவஸம் போர்டுக்கு பெண்கள் வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. பெண்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக முதலில் போலீஸ் முடிவெடுக்கட்டும், பின்பு பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார். 

பம்பையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்ற மனிதி அமைப்பின் தலைவர் செல்வி கூறுகையில் "இதுவரை போலீஸார் எங்களை திரும்பி போக சொல்லவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என அதிகாரப்பூர்வமாக போலீஸார் சொல்லட்டும், நாங்கள் சபரிமலையில் இருந்து செல்கிறோம். பின்பு, இதுதொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதியை பெறுகிறோம்" என தெரிவித்துள்ளார்.