கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று மாலை மண்டலப் பூஜைக்காக திறக்கப்படவுள்ளது. சுபரிமலையில் இன்று மாலை 6 மணிக்கு சந்நிதானத்தின் நடை தந்திரியின் பூஜைக்கு பின்பு திறக்கப்படும். மண்டலப் பூஜைக்காக இன்று திறக்கப்படும் கோயிலின் நடை இத்துடன் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி சாத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 27 ஆம் தேதி திறக்கப்படும். இதனையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளரான திருப்தி தேசாய், 6 பெண்களுடன் வரும் 16-ஆம் தேதி கேரளாவிற்கு வந்து 17-ஆம் தேதி சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார். எனவே கேரள அரசு தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் பயண வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பிரதமர், கேரள மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்கள், கேரளா டி.ஜி.பி., ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் இன்று காலை சபரிமலை செல்வதற்காக திருப்தி தேசாய் தனது குழுவினருடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். இதனையடுத்து விமான நிலையத்தில் திருப்தி தேசாய்க்கு பலத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய வாசலில் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் திருப்தி தேசாய்க்கு எதிராக போராட்டமும் கோஷமும் எழுப்பினர். மேலும், கொச்சி விமான நிலைய டாக்ஸி ஓட்டுநர்களும் திருப்தி தேசாய்க்கு வாகனம் தர முடியாது என முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவை கொச்சி விமான நிலைய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாமல் திருப்தி தேசாய் குழுவினர் செய்வதறியாமல் இருந்து வருகின்றனர்.
பெண்ணியவாதியான திருப்தி தேசாய்தான் 2016 ஆம் ஆண்டில் மகராஷ்ட்டிரா மாநிலத்தில் சிக்னாபூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்கு பெண்களை அழைத்துச் சென்று புரட்சி செய்தவர். அதற்கு முன்பு வரை அந்தக் கோவிலில் 60 ஆண்டுகள் பெண்களை அனுமதிக்கவில்லை. இப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் இத்தகைய முயற்சியை திருப்தி தேசாய் ஈடுபட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் தொடக்கத்தில் பெண்கள் சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆயிக்கணக்கானோர் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் நேற்று கூறியது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வரும் வரை, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறு வழக்கறிஞர் மாத்தீவ்ஸ் நெடும்பாரா கோரிக்கை விடுத்தார்.
அதற்கு சீராய்வு மனுக்களை அரசியல் சாசன அமர்வு ஜனவரி 22ஆம் தேதி விசாரிக்கும் வரை காத்திருக்கும்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனிடையே நாளை இன்று பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட உள்ளது. இதனால் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.அந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்களை சபரிமலையில் அனுமதிப்போம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.