அம்பானிகள் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு அவர்களை தேர்வு செய்தோம் என்று பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதோடு மத்திய அரசின் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தை பயன்படுத்தாமல் ரிலையன்ஸ் அனில் அம்பானியின் நிறுவனத்தை டசால்ட் தேர்வு செய்தது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி எரிக் டிராப்பியர் எக்னாமிக்ஸ் டைம்க்கு பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் எரிக் டிராப்பியர் பேசியிருப்பதாவது:-
அம்பானிகளுடையது மரியாதையான குடும்பம்
“2011-12 ஆம் ஆண்டுகளில் நாங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை கண்டறிந்தோம். அதனால், ஹலண்டே அதிபராக இருந்த காலத்தில் இது முடிவானது அல்ல. மேலும் தற்போதையை இந்திய பிரதமர் மோடி காலத்தில் கூட முடிவானது அல்ல. நீண்ட காலமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஆலோசனை செய்து வந்தோம். அம்பானிகள் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது என்பது தவறானதாகும். இந்த விவகாரத்தில் டசால்ட் ஏற்கனவே 30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
ஊழல் விசாரணைக்கு தயார்
இந்த விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. டசால்ட் விசாரணைக்கு தயாராகவே உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் சட்டதிட்டங்கள், வர்த்தக ஒப்பந்த நடைமுறைகளை நாங்கள் முறையாக பின்பற்றுகிறோம். நாங்கள் முற்றிலும் ஊழலுக்கு எதிரானவர்கள். இந்தியாவிலோ, பிரான்ஸ் நாட்டிலோ எந்த விசாரணை நடைபெற்றாலும் அதற்கு தயாராகவே இருக்கிறோம். பதிலளிப்பது எங்களது பொறுப்பு. ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பதை நிரூபிப்போம்.
ரூ3000 கோடிக்கு ஒப்பந்தம் என்பது தவறு
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் 30000 கோடி ரூபாய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும். ரூ850 கோடிக்கு தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் வாங்கப்பட்ட விலையை விட குறைவான விலைக்கே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.