இந்தியா

'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் ?

'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் ?

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மண்டலப் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டலப் பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி  சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக ஏராளமான பிரச்சனைகளை சபரிமலை கோயில் இப்போது சந்தித்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் தொடக்கத்தில் பெண்கள் சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆயிக்கணக்கானோர் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் நேற்று கூறியது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வரும் வரை, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறு வழக்கறிஞர் மாத்தீவ்ஸ் நெடும்பாரா கோரிக்கை விடுத்தார்.

அதற்கு சீராய்வு மனுக்களை அரசியல் சாசன அமர்வு ஜனவரி 22ஆம் தேதி விசாரிக்கும் வரை காத்திருக்கும்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனிடையே நாளை இன்று பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட உள்ளது. இதனால் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.அந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்களை சபரிமலையில் அனுமதிப்போம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்தது.

பின்பு இதில் திடீர் திருப்பமாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தை திருவாங்கூர் தேவஸம் போர்டு அணுக உள்ளதாக தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். ஆனால், சில பெண்ணியவாதிகளால் தொடர்ந்து சபரிமலை விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மகராஷ்ட்ரா மாநிலத்தின் பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலைக்கு செல்ல 6 பெண்களுடன் கொச்சி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலையம் வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அரசு அவரை மீண்டும் புனேவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதேபோல ஐப்பசி மாதப் பூஜையின் போது நடை திறக்கப்பட்டபோது ரெஹானா பாத்திமா என்ற பெண்ணியவாதியால் பிரச்சனை ஏற்பட்டது. 

கார்த்திகை மாதம் முதல் நாள் தொடக்கத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்குவார்கள். ஆனால், இம்முறை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளதாக கேரள போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால், வழக்கம்போல ஆந்திரம், தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சபரிமலைக்கு வந்துள்ளார்கள். இவர்கள் பெரும்பாலும் அம்மாநிலங்களின் கிராமங்களில் இருந்து வருபவர்கள் என்பதால் போலீஸாரின் கடுமையான கெடுபிடிக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனிடைய பாஜக மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான அரசியல் மோதல்கள் உண்மையான பக்தர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு செல்லும் பக்தர்கள் பெரும் கூட்டத்தின் இடையே நெய் அபிஷேகமும், சுவாமி தரிசனனும் முடித்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறுவார்கள். ஆனால் இம்முறை போலீஸார் கெடுபிடியால் தங்களால் சந்நிதானத்தில் சிறிது நேரம் கூட உட்கார முடியவில்லை என பக்தர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த பக்தரான சாய்ராமன் "கேரள போலீஸார் பக்தர்களிடம் கிரிமனல்களிடம் நடப்பது போல நடந்துக்கொள்கிறார்கள். வயதான பெண் பக்தர்களும் இதன் கெடுபிடிகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் குறைவாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த மற்றொரு பக்தரான மணி "சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என நீதிமன்றம் கூறியுள்ளதை தவிர, எந்த விரதமும் இல்லாமல் செல்லலாம் என கூறவில்லை. எனவே வீம்புக்கு சபரிமலைக்கு வரும் பெண்ணியவாதிகளால், உண்மையான பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சிகளும் வன்முறை செய்யாமல் பக்தர்களின் நலனை காக்கும் வகையில் செயல்பட வேண்டும்" என வருத்தத்துடன் கூறினார்.