இந்தியா

“பிள்ளைகளுக்கு கொலை செய்ய கற்றுக்கொடுத்துள்ளோம்” - காந்தி படத்தை சுட்டவரின் கணவர்

“பிள்ளைகளுக்கு கொலை செய்ய கற்றுக்கொடுத்துள்ளோம்” - காந்தி படத்தை சுட்டவரின் கணவர்

webteam

தேசத்தின் ஒற்றுமையை சிதைப்பவர்களை கொலை செய்வதற்கு தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளதாக காந்தியின் உருவபொம்மை படத்தை சுட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். 

தேசத்தின் தந்தையாக கொண்டாடப்படும் காந்தி கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி தனது 78 வது வயதில் நாதுராம் கோட்சேவினால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி ஆண்டு தோறும் ஜனவரி 30 அன்று காந்தியடிகளின் நினைவு தினம் என்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 30 காந்தியின் 71 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

ஆனால், அன்றைய தினம் உத்திரப்பிரதேசம் அலிகாரில் இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சக்குன் பாண்டே ஒரு துப்பாக்கியால் காந்தியின் உருவ பொம்மையை சுட்டுவிட்டு, பின்னர், காந்தியின் கொடும்பாவியை தீயிட்டு எரித்து ஆதரவாளர்களுடன் பாண்டே கோஷமிட்டார். இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக சக்குன் பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் மீது சட்டப்படி காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதனால் சக்குன் பாண்டே தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கணவர் கூறும்போது, “சக்குன் பிரயாக்ராஜ்ஜில் நடக்கும் கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். தலைமறைவாகவில்லை. தசரா அன்று ராணவனின் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். அதேபோன்று காந்தி சுடப்பட்ட தினத்தில் நாங்கள் அவரது உருவப்பொம்மையை சுடுகிறோம்.

இது ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் வழக்கம் தான். இதுமட்டுமின்றி தேசத்தின் ஒற்றுமையை சிதைப்பவர்கள் யாராக இருந்தாலும் கொலை செய்ய வேண்டும் என்று எங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்துள்ளோம். எங்கள் குழந்தைகள் அப்பாவிகளாக இருக்கமாட்டார். அவர்களை கொல்லப்படுவதற்கு முன்பு, பலரை கொன்றுவிடுவார்கள்” என தெரிவித்தார்.