பெய்லி பாலம் pt web
இந்தியா

வயநாடு | பெய்லி முறையில் அமைக்கப்பட்ட பாலம்; எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

வயநாட்டில், மீட்புப் பணிக்காக களத்தில் உள்ள ராணுவத்தினர், முண்டக்கை பகுதிக்குச் செல்ல, சாலியாற்றின் குறுக்கே, எஃக்கு பாலம் ஒன்றை அமைத்துள்ளனர்... இதை கட்டமைக்க அவர்கள் எதிர்கொண்ட சவால்களைப் பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் பாலவெற்றிவேல்

கட்டப்பட்டிருந்த பாலம் வெள்ளத்திற்கு இரையானது

பேரிடர் என்ற வார்த்தைக்கு உதாரணமாக காட்சி தருகின்றன, வயநாட்டில் உள்ள சூரல்மலையும் முண்டக்கையும்... சூரல்மலையில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன... ஆனால், முண்டக்கை பகுதிக்கு செல்லவே முடியவில்லை. இவ்விரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சாலியாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் வெள்ளத்திற்கு இரையானதே, இதற்குக் காரணம்...

ஆவேசமாகப் பாய்ந்து பெருக்கெடுத்த வெள்ளம், பாலத்தை அபகரித்துச் சென்றதால், முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியாமல் போனது. கோவை - சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர்களில், வான்வழியாக முண்டக்கை சென்ற டெல்டா ஸ்குவாடு படையினர் மீட்புப் பணிகளை தொடங்கினர். ஆனால், தரைவழியாக முண்டக்கைக்கு செல்ல முடியவில்லை. சாலியாற்றின் குறுக்கே, நடந்து செல்வதற்காக தற்காலிக தொங்கு பாலம் அமைக்கப்பட்டது.

பெய்லி முறையில் கட்டப்பட்ட துரிதபாலம்

தற்போது வாகனங்கள் செல்வதற்காக, பெய்லி என்ற முறையில் துரிதமாக எஃக்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவான மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவினர் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். இதற்காக குறைந்த இடைவெளி உள்ள ஒரு பகுதி, தேர்ந்தெடுக்கப்பட்டது. சாலியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டே தான் உள்ளது. ஆற்றின் நீரோட்டத்தில் இறங்கி, ராணுவத்தினர் நூற்றுக்கும் அதிகமானோருடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் கரம் கோர்த்து பெய்லி பாலத்தை கட்டமைக்கும் பணிகளைத் தொடங்கினர். கனரக வாகனங்கள் பயணிக்க வேண்டிய பாலத்தை கட்டமைக்கும் பொறுப்புடன் களமிறங்கிய அவர்களுக்கு, அங்கு பொழிந்து கொண்டே இருந்த சாரல் மழை சவாலாக அமைந்தது.

பாலம் கட்டமைக்கும் பிரிவினைச் சேர்ந்த முரளி இதுதொடர்பாக கூறுகையில், “50 டன், 20 டன் எடையுள்ள வாகனங்கள் செல்வதற்கு ஏற்றவாறு இவ்வகை பாலங்கள் கட்டமைக்கப்படும். இதில் அனைத்து வண்டிகளும் செல்லும். அனைவரும் தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறார்கள். நேற்றிரவு தொடர்ச்சியான வேலை இருந்தது. வானிலை கூட மிக மோசமாக இருக்கிறது. ஆனாலும், தொடர்ச்சியான வேலை நடக்கிறது” என தெரிவித்தார்.

சூரல்மலை - முண்டக்கை இடையே சாலியாற்றின் மீது கட்டமைக்கப்பட்ட இந்த எஃக்கு பாலம், 70 மீட்டர் நீளம் கொண்டது. இதற்காக ஆயத்த நிலையில் இருந்த பாகங்கள், விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வயநாடு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை, சாலியாற்றின் குறுக்கே பொறியியல் முறைப்படி, நேர்த்தியாக ஒருங்கிணைத்து, பெய்லி பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.