இந்தியா

குஜராத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - அசுத்த நீரை குடிக்கும் மக்கள்

குஜராத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - அசுத்த நீரை குடிக்கும் மக்கள்

webteam

குஜராத் மாநிலத்தில் குடிக்க தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் அசுத்த நீரை குடித்து வருகின்றனர்.

மழை இல்லாத நிலை, கோடை வெயில் அதிகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் குறைவு போன்ற காரணங்களினால் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிக்கவும், குளிக்கவும் நீரின்றி தவித்து வருகின்றனர். 

பல இடங்களில் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல கிலோ மீட்டர் சென்றே நீர் எடுக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசும் தண்ணீரை மக்களுக்கு அளிப்பதற்கு போதுமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த நிலை தமிழகத்தில் மட்டும் இல்லை. இந்தியாவின் பல இடங்களிலும் இதே நிலைதான். அந்த வகையில் குஜராத்திலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அந்த மாநிலத்தின் நவ்சாரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் தண்ணீர் இல்லாததால் வேறு வழியின்றி அசுத்தமான நீரை குடிக்கின்றனர். 

அந்த நீரும் அகல பாதாளத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு தான் எடுக்கப்படுகிறது. அவர்கள் சுத்தமான நீரை குடிக்க வேண்டுமென்றால் 200 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். இதனால் அந்தக் கிராமத்தில் வசித்து வந்த குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, தற்போது 12 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர்.